விடுதலை புலிகளின் தாக்குதலை விட உத்தேச மத்திய வங்கிச் சட்டமூலம் பாரதூரமானது

82 0

விடுதலை புலிகள் அமைப்பு மத்திய வங்கிக்கு மேற்கொண்ட தாக்குதலை விட தற்போது வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள உத்தேச புதிய மத்திய வங்கி சட்டமூலம் பாரதூரமானது. மத்திய வங்கியின் ஆளுநரை நிதியமைச்சர் நியமிப்பது எவ்வாறு சுயாதீனமாக அமையும்.

அரசியல் நோக்கத்தை முன்னிலைப்படுத்தி சட்டங்கள் இயற்றப்பட்டால் அது பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தும் என பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க தெரிவித்தார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள உத்தேச புதிய மத்திய வங்கி சட்டமூலம் விடுதலை புலிகள் அமைப்பு மத்திய வங்கியின் மீது மேற்கொண்ட தாக்குதலை விட பயங்கரமானது.மத்திய வங்கியை சுயாதீனப்படுத்துவதற்காக இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்த சட்டமூலத்தில் மத்திய வங்கியின் ஆளுநர்,நிதி சபை உறுப்பினர்கள் உட்பட மத்திய வங்கியின் உயர்மட்ட அதிகாரிகள் ஆகியோர் நிதியமைச்சரின் பரிந்துரையின் ஊடாக ஜனாதிபதி நியமிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகளுக்கு முரணாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சராக பதவி வகிக்கிறார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சராக மத்திய வங்கியின் ஆளுநர்,நிதி சபையின் உறுப்பினர்களை எவ்வாறு நியமிக்கப்படும்,இதில் எவ்வாறு சுயாதீனத்தன்மை பேணப்படும்.மத்திய வங்கியால் அரசியல் தலையீடு இல்லாமல் எவ்வாறு செயற்பட முடியும்.

இந்த சட்டமூலத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்களை உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.பாராளுமன்ற குழு நிலை வேளையின் போது சட்டமூலம் திருத்தம் செய்யப்படுமா என்பதில் அவதானமாக உள்ளோம் என்றார்.

ஜனாதிபதியின் பரிந்துரைகளை அரசியலமைப்பு பேரவை புறக்கணிக்கும் போது மாற்றீடு நடவடிக்கைகள் ஏதும் இந்த சட்டமூலத்தில் குறிப்பிடப்படவில்லை.

உத்தேச புதிய மத்திய வங்கி சட்டமூலத்தில் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் எதிர்வரும் 11ஆம் திகதி (வியாழக்கிழமை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.