எதிர்க்கட்சிக்கு நம்பிக்கையான ஒருவருக்கே அரச நிதிக்குழுவின் தலைவர் பதவியை வழங்க வேண்டும்

84 0

பாராளுமன்ற அரச நிதிக்குழுவின் தலைமை பதவிக்கு எதிர்க்கட்சிக்கு நம்பிக்கையான உறுப்பினர் ஒருவரை அரசாங்கம் நியமிக்கவேண்டும் என பல தடலைகள் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளபோதும் அதனை அரசாங்கம் தட்டிக்கழித்து வருகிறது.

எதிர்க்கட்சியின் ஆதரவு அரசாங்கத்துக்கு தேவையாக இருந்தால் எமது கோரிக்கையை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும்.

நிலையியற் கட்டளையின் பிரகாரம் எமக்கு கிடைக்கவேண்டிய தலைமை கிடைக்காவிட்டால் சர்வதேசத்திடம் முறையிட வேண்டிவரும் என எதிர்க்கட்சியின் பிரமதகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

பாராளுமன்ற அரச நிதிக்குழுவுக்கு எதிர்க்கட்சிக்கு நம்பிக்கையான ஒருவரை நியமிக்குமாறு எதிர்க்கட்சியிக் கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படாமல் இருப்பது தொடர்பாக வினவியபோதே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

பாராளுமன்ற அரச நிதிக்குழுவின் தலைவர நியமனம் தொடர்ந்து 4 தடவைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மாலை பாராளுமன்ற தெரிவுக்குழு கூடுகிறது. இந்நிலையில் அரச நிதிக்குழுவுக்கு தலைவர் நியமனம் தொடர்பாக கலந்துரையாட இருக்கிறது.

கோபா குழுவின் தலைவர் பதவி நிலையியற் கட்டளையின் பிரகாரம் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவருக்கே வழங்கப்படவேண்டும். ஆனால் அரசாங்கம், அரசாங்கத்துக்கு ஆதரவாக செயற்படும் எதிர்க்கட்சி உறுப்பினருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தது. அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. தலைவர் பதவி எமக்கு நம்பிக்கையான ஒருவருக்கே வழங்கப்படவேண்டும்.

அத்துடன் பாராளுமன்ற அரச நிதிக்குழுவின் தலைவராக ஹர்ஷடி சில்வாவை நியமிக்குமாறு நாங்கள் பல தடவைகள் அரசாங்கத்துக்கு தெரிவித்திருக்கிறோம். ஆனால் அரசாங்கம் அதனை திட்டமிட்டு நிராகரித்து வருகிறது.

ஜனாதிபதியினால் பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்படுவதற்கு முன்னர் ஹர்ஷடி சில்வாவே அதன் தலைவராக இருந்து, சிறந்த முறையில் அதன் நடவடிக்கைகளை முன்னெடுத்துச்சென்றிருந்தார். அரசாங்கம் இதனை பொறுத்துக்கொள்ள முடியாமலே தற்போது அரசாங்கத்துக்கு தேவையான ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

அத்துடன் இந்த அரசாங்கம் காேத்தாபய ராஜபக்ஷ்வின் வழியிலேயே தொடர்ந்து செல்கிறது. அந்த அரசாங்கத்தில் இருந்தவர்களே தற்போதும் இருக்கின்றனர். ஜனாதிபதி மாத்திரமே அதில் மாற்றத்துக்கு இருக்கிறது. அதனால் அவர்கள் எப்போதும் அவர்களின் ஊழல் மோசடிகளுக்கு துணைபோகக்கூடிய ஒருவரையே நியமித்துக்கொள்ள முயற்சிப்பார்கள்.

அத்துடன் எமது உரிமைகளை நாங்கள் எமக்குள் கலந்துரையாடி பெற்றுக்கொள்ளவே முயற்சிக்கிறோம். முடியாத நிலை ஏற்பட்டால் சர்வதேசத்தை நாடுவதை தவிர எமக்கு வேறு வழியில்லை.

அதனால் நிலையியற் கட்டளையின் பிரகாரம் எமக்கு கிடைக்கவேண்டிய அரச நிதிக்குழுவின் தலைவர் பதவியை எதிர்கட்சிக்கு நம்பிக்கையான ஒருவருக்கு வழங்கவேண்டும். இல்லாவிட்டால் சர்வதேசத்தில் முறையிட்டாவது எமது உரிமையை பெற்றுக்கொள்ள வேண்டி ஏற்படும் என்றார்.