யாழ்ப்பாணம், கந்தரோடையின் வரலாற்றை சிங்கள பௌத்த வரலாறாகத் திரிபுபடுத்தும் நோக்குடன் திட்டமிட்ட பௌத்த விகாரை அமைப்பதற்கான முற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதனை கண்டித்து வலிகாமம் தமிழ்த் தேசியப் பேரவை பல அமைப்புகளுடன் இணைந்து ஞாயிற்றுக்கிழமை (07) கவனயீர்ப்பு போராட்டம் கொட்டும் மழையிலும் இடம்பெற்றது.
சிங்கள பௌத்த பேரினாவாத அரசின் பூரண அனுசரணையுடன் தமிழ்த் தேசத்தின் இருப்பை அழித்து வரலாற்றைத் திரிபுபடுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் கட்டமைக்கப்பட்ட மரபுரிமைசார் இனவழிப்பு செயற்பாடிற்கு எதிரான இப் போராட்டத்திற்கு தமிழர் வாழ்வுரிமை மையம் மற்றும் கந்தரோடை சிவில் சமூக செயற்பாட்டாளர்களுடன் இணைந்து தமிழ்த் தேசியப் பேரவை முன்னெடுத்தது.
இப்போராட்டத்தில் கந்தரோடையில் பௌத்தமயமாக்கலை நிறுத்து தமிழர் தேசத்தில் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை நிறுத்து, இனவாதத்தை கைவிடு, புத்த தர்மத்தை கடைப்பிடி, எங்கள் கிராமத்தில் விகாரை வேண்டாம் என்ற கோசங்களை தமிழ் சிங்கள ஆங்கில மொழிகளை தாங்கிய பதாதைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்ணி பாராளுமன்ற உறுப்பினர் செ. கயேந்திரன் சட்டதரணிகளான காண்டிபன், சுகாஸ் குறித்த கட்சியின் ஆதரவாளர்கள் வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர் சே.கலை அமுதன் மற்றும் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.