உண்மையை கண்டறியாமல் செய்தி வெளியிடுவதை தவிர்க்குமாறு SLA தலைவர் வேண்டுகோள்

81 0

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற 5ஆவது ஆசிய இளையோர் மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியின் கோலூன்றிப் பாய்தல் வீரர் துஷேன் சில்வா பங்குபற்றுவதற்கு தேவையான கோலை விமானம் மூலம் கொண்டு செல்ல ஸ்ரீலங்கா அத்லெட்டிக்ஸ் தவறியதாக உண்மையை கண்டறியாமல் சில ஊடகங்கள் தவறாக செய்தி வெளியிட்டதாக ஸ்ரீலங்கா  அத்லெட்டிக்ஸ் (SLA) தலைவர் மேஜர் ஜெனரல் பாலித்த பெர்னாண்டோ கூறினார்.

கொழும்பில் அண்மையில் நடத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

முன்னேற்பாடுகளுக்கு அமைய கஸக்ஸ்தான் கோலூன்றிப் பாய்தல் வீரர் ஒருவரிடம் கோல் ஒன்றைப் பெற்று ஆசிய இளையோர் மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் போட்டியிட்ட துஷேன் சில்வா, வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

அப்படி இருக்கையில், ஆசிய இளையோர் மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் துஷேன் சில்வாவுக்கு சொந்த கோலைப் பயன்படுத்த ஸ்ரீலங்கா அத்லெட்டிக்ஸ் தவறிவிட்டதாக சில ஊடக செய்திகள் வெளியாகியிருந்தன.

அந்த ஊடகங்கள் உண்மையைக் கண்டறியாமல் தவறான செய்தியை வெளியிட்டன. அந்த தவறான செய்திகளுக்கு தூபம் இடும் வகையில், கோலை விமானத்தில் கொண்டு செல்ல தங்களிடம் ஸ்ரீலங்கா அத்லெட்டிக்ஸ் உதவி கோரவில்லை என விளையாட்டுத்துறை அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

‘நாங்கள் ஏற்கனவே கஸக்ஸ்தான் வீரர் ஒருவரிடம் கோலைப் பெறுவதற்கு தீர்மானித்திருந்தோம். ஆகையால்,  விமானத்துக்கு 3 இலட்சம் ரூபாவை வீண் விரயம் செய்யப்படுவது தவிர்க்கப்பட்டது. அதனால் விளையாட்டுத்துறை அமைச்சிடம் உதவி கோரவேண்டிய அவசியம் ஏற்படவில்லை. எனவே, உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடவேண்டாம்.

‘உஸ்பெகிஸ்தானுக்கு பயணமான இலங்கை இளையோர் மெய்வல்லுநர் குழாத்தின் முகாமையாளர் சந்தன ஏக்கநாயக்க, முன்கூட்டியே கஸக்ஸ்தான் வீரருடன் கலந்துரையாடி தரம்வாய்ந்த கோலை துஷேனுக்கு பெற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்திருந்தார். அந்த கோலே துஷேனுக்கு வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுக்கொடுத்தது’ என மேஜர் ஜெனரல் பாலித்த பெர்னாண்டோ தெரிவித்தார்.

இது இவ்வாறிருக்க, உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஆசிய இளையோர் மெய்வல்லுநர் போட்டியில் இலங்கை மெய்வல்லுநர்களின் ஆற்றல் வெளிப்பாடுகள் தொடர்பாக பூரண அறிக்கை ஒன்றை ஸ்ரீலங்கா அத்லெட்டிக்ஸ் தலைவரிடம் அணி முகாமையாளர் சந்தன ஏக்கநாயக்க கையளித்தார்.

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஆசிய இளையோர் மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் இலங்கையிலிருந்து 7 பேர் பங்குபற்றியதுடன் இருவர் வெள்ளிப் பதக்கங்களையும் இருவர் வெண்கலப் பதக்கங்களையும் வென்றெடுத்தனர். மற்றைய இருவர் சிறந்த பெறுதிகளை பதிவு செய்ததாக சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

எவ்வாறாயினும் இலங்கையின் சிறந்த பெறுபேறுகள், சில ஊடகங்களின் தவறான செய்தியினால் மழுங்கடிக்கப்பட்டுவிட்டதாக அவர் கவலை வெளியிட்டார்.

 

சீனா, இந்தியா போன்ற நாடுகள் ஆதிக்கம் செலுத்திய இந்தப் போட்டியில் இலங்கை 13ஆவது இடத்தை பெற்றது. சீனா 15 தங்கம், 7 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களையும், இந்தியா 6 தங்கம், 11 வெள்ளி, 7 வெண்கலப் பதக்கங்களையும் வென்றன. தெற்காசிய நாடுகளில் இந்தியாவும் இலங்கையும் மாத்திரமே பதக்கங்கள் பட்டியலில் இடம்பெற்றன.

இது இவ்வாறிருக்க, ஆசிய விளையாட்டு விழாவில் 18 வருடங்களின் பின்னர் முதல் தடவையாக இலங்கைக்கு பதக்கம் வெல்லக்கூடிய வாய்ப்பு உருவாகியுள்ளதாக ஸ்ரீலங்கா அத்லெட்டிக்ஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

பேர்மிங்ஹாம் 2022 பொதுநலவாய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற யுப்புன் அபேகோன், ஆசிய விளையாட்டு விழாவில் சாதிப்பார் என வெகுவாக எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, தியகமவில் தேசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டி ஞாயிற்றுக்கிழமை (07) காலை ஆரம்பமானது.

ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்புக்கான தேர்வுகள் ஏற்கனவே நிறைவுபெற்றுள்ள நிலையில், கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டி, டிரினிடாட் மற்றும் டுபாகோவில் நடைபெறவுள்ள இளையோர் பொதுநலவாய விளையாட்டு விழாவுக்கான திறன்காண் போட்டியாக அமையவுள்ளது.

உஸ்பெகிஸ்தானில் வெள்ளிப் பதக்கம் வென்ற துஷேன் சில்வா, உயரம் பாய்தல் வீரர் நிலுபுல் பெஹசர (திக்வெல்ல, விஜித மத்திய கல்லூரி), ஆகியோரும் வெண்கலப் பதக்கம் வென்ற 400 மீற்றர் சட்டவேலி ஓட்ட வீரர் அயோமல் அக்கலன்க (அம்பகமுவ மத்திய கல்லூரி), 800 மீற்றர் ஓட்டப் போட்டி வீராங்கனை கசுனி விக்ரமசிங்க (கம்பளை விக்ரமபாகு தேசிய பாடசாலை) ஆகிய நால்வரும் பெரும்பாலும்  இளையோர் பொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்குபற்றுவது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், தேசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் 18 வயதுக்குட்பட்ட பிரிவில் பங்குபற்றும் கனிஷ்ட வீர, வீராங்கனைகள் கனிஷ்ட பொதுநலவாய விளையாட்டு விழாவுக்கான அடைவு மட்டத்தை குறிவைத்து பங்குபற்றவுள்ளனர்.

16, 18, 20, 23 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் நடைபெறும் தேசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் 2265 வீர, வீராங்கனைகள் பங்குபற்றுகின்றனர்.