ஜூனில் மதிமுக பொதுக்குழு – பொதுச் செயலாளர் வைகோ தகவல்

85 0

மதிமுக 30-ம் ஆண்டு தொடக்க விழா சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. பொதுச் செயலாளர் வைகோ, கட்சிக் கொடியேற்றி வைத்து, தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

பின்னர் அவர்செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த ஆண்டு கட்சிக்கு புதுவாழ்வு தரும் ஆண்டாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. கட்சியின் அமைப்பு தேர்தல் 75 சதவீதம்முடிவடைந்து விட்டது. வரும் ஜூன் மாதம் பொதுக்குழு நடைபெறும். சொத்துப் பட்டியல் குறித்து திருப்பூர் துரைசாமி எதுவுமே தெரியாமல் பேசுகிறார். ஆண்டுதோறும் வருமான வரித் துறைக்கு கணக்குகள் சமர்ப்பிக்கப்படுகின்றன.

எந்தக் கட்சியும் சொத்துப் பட்டியல் வெளியிடாது. கட்சியின் வரவு, செலவு கணக்கு, ஆடிட்டர் மற்றும் வருமான வரித் துறையிடம்தான் சமர்ப்பிக்கப்படும்.

திராவிட மாடல் காலாவதியாகிவிட்டது என்று கூறும் ஆளுநர்தான் காலாவதியாகிப்போனவர். ஓய்வுபெற்ற காவல் அதிகாரி, இங்கு குழப்பம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். பாஜக, இந்து அமைப்புகளுக்கான பிரதிநிதியாக அவர் இருக்கலாமே தவிர, ஆளுநர் பதவிக்குத் தகுதியற்றவர். எந்த ஆளுநரும் செய்யாத தவறுகளை ஆர்.என்.ரவி செய்து கொண்டிருக்கிறார். அவர் ஆளுநர் மாளிகையைவிட்டு வெளியேற்றப்பட வேண் டும். இவ்வாறு வைகோ கூறினார்.