கஜேந்திரனிடம் ஒப்படைத்த கடிதம் போலியானது அல்ல என்கிறார் பத்மநாதன்

93 0

தையிட்டி விகாரைக்கு அருகில் உள்ள காணிகளை இராணுவத்தினரிடம் இருந்து விடுவித்து தம்மிடம் தர கோரி 2021ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனிடம் ஒப்படைத்த கடிதம் போலியானது அல்ல என கடிதம் எழுதி கையெழுத்து வைத்தவர்களில் ஒருவரான பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

2021ஆம் ஆண்டே நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனிடம் தமது காணிகளை இராணுவத்தினரிடம் இருந்து பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தையிட்டிவிகாரையை சூழவுள்ள காணி உரிமையாளர்கள் கடிதம் மூலம் கோரி இருந்தனர்.

அந்த கடிதம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்துள்ளதுடன், கடிதம் கொடுத்தவர்களில் ஒருவரான பத்மநாதன் என்பவரும் ஊடகங்களுக்குக் கடிதம் கொடுத்தமை தொடர்பில் கருத்து தெரிவித்து இருந்தார்.இந்நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் 2019ஆம் ஆண்டு திகதியிடப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாருக்கு எழுதப்பட்ட கடிதம் என ஒன்றை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து, அந்த கடிதம் எழுதப்பட்ட கால பகுதியில் கஜேந்திரகுமார் நாடாளுமன்ற உறுப்பினரே இல்லை. ஒருவரின் தொலைபேசி இலக்கம் 11 இலக்கங்களைக் கொண்டுள்ளது.

இருவரின் கையெழுத்து ஒரே மாதிரி இருக்கிறது என்று கூறி இந்த கடிதம் போலியானது என குறிப்பிட்டு, அந்த கடிதத்துடன் , கஜேந்திரனுக்கு எழுதிய கடிதத்தையும் இணைத்து, அந்த கடிதம் போன்றே இந்த கடிதமும் போலி என நிறுவ முயசித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊடகங்களுக்கு நேற்றைய தினம் கருத்து தெரிவித்த ஆ.பத்தமநாதனை ஊடகவியலாளர்கள் இன்றைய தினம் சந்தித்து கருத்துக் கேட்ட போது,

தாங்கள் கடிதம் கொடுத்தது உண்மை எனவும் , விரும்பின் அந்த கடிதத்தின் கீழ் உள்ள ஏனையவர்களின் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொண்டு கடிதம் கொடுத்தன் உண்மை தன்மையை விளங்கிக் கொள்ளுங்கள் எனத் தெரிவித்துள்ளார்.

தங்களின் அரசியலுக்காக எம்மை பொய்க்காரர் ஆக்குவது எமக்கு மிகுந்த மன வேதனையை ஈடுபடுத்தியுள்ளதாக மேலும் கவலையுடன் தெரிவித்துள்ளார்.