தையிட்டி விகாரை விவகாரம் : அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னரே பிரச்சினைக்கான தீர்வு

107 0

யாழ்ப்பாணம் – தையிட்டி விகாரை குறித்த சர்ச்சை தொடர்பில் முழுமையான அறிக்கை கோரப்பட்டுள்ளது. அடுத்த வாரம் அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னரே இந்த பிரச்சினைக்கான தீர்வு வழங்கப்படும் என்று புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க   தெரிவித்தார்.

சட்டங்களினூடாக மதத்தைப் பின்பற்றுவதற்கு மக்களுக்குள்ள சுதந்திரத்தை மட்டுப்படுத்த நாம் விரும்பவில்லை.

அரசியல்வாதிகளிடத்தில் ஒழுக்கமும் , சகிப்புத் தன்மையும் ஏற்படும் வரை இவ்வாறான பிரச்சினைகள் மீள் நிகழாமையை எம்மால் உறுதிப்படுத்த முடியாது.

எனவே தையிட்டி விகாரை விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்றும் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் – தையிட்டு விகாரையை அகற்றக் கோரி பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு தெரிவித்த அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில் ,

வடக்கு மற்றும் கிழக்கில் இவ்வாறான பிரச்சினைகள் தொடர்ந்தும் ஏற்படுகின்றன. இதற்கான அடிப்படை காரணம் என்ன என்பது எமக்குத் தெரியவில்லை.

அரசியல்வாதிகள் தமக்கான வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காகவே இவ்வாறு செயற்படுகின்றனர். வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வர் ஆலய விவகாரத்திலும் இவ்வாறே இடம்பெற்றது.

அவர்களாகவே சென்று ஆலயத்தை உடைத்து அதனை நாம் உடைத்ததாகக் குறிப்பிட்டனர். இவ்வாறான பிரச்சினைகள் மீண்டும் ஏற்படாமலிருக்க வேண்டுமெனில் அரசியல்வாதிகள் அனைவரையும் இவ்வாறான செயற்பாடுகளிலிருந்து நீக்க வேண்டும்.

எம்மை இனவாதிகளெனக் கூறுபவர்கள் இறுதியில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இங்குள்ளது விகாரை என்று நாம் கூறினால் அவர்கள் அதனை கோவில் என்கின்றனர். பின் தொல்பொருளியல் திணைக்களத்தினூடாக ஆய்வு செய்து பார்க்கும் போது அங்குள்ளது விகாரை என்பது தெரியவருகிறது.

அதனை பின்னர் அது தவறென்றும் , எம்மை இனவாதிகளென்றும் விமர்சிக்கின்றனர். தொல்பொருளியல் ஆய்வு  என்பது உண்மையை கண்டறியும் விஞ்ஞானமாகும். அவ்வாறிருக்கையில் உண்மைகளையும் கோட்பாடுகளையும் எவ்வாறு மாற்ற முடியும்?

கிளிநொச்சி மாவட்டத்தில் உடைந்து விழுந்த கோவில்களை எமது முயற்சியில் மீளப் புனரமைத்தமை தொடர்பில் எவரும் பேசவில்லை.

எம்மால் முன்னெடுக்கப்படும் இவ்வாறான விடயங்கள் ஒருபோதும் ஊக்குவிக்கப்படுவதில்லை. நிதி நெருக்கடி காரணமாக அந்த வேலைத்திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. அதற்கான நிதி திரட்டும் பணிகளையும் நாம் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

குறித்த கிளிநொச்சி ஆலயங்களில் மிக தனித்துவமான கட்டடக்கலைகள் காணப்படுகின்றன. உலகில் வேறெங்கும் அவ்வாறான ஆலயங்கள் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

அதே போன்று இலங்கையிலுள்ள 7 சிவன் ஆலயங்களை மீளப் புனரமைப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம்.

சட்டங்களினூடாக மதத்தைப் பின்பற்றுவதற்கு மக்களுக்குள்ள சுதந்திரத்தை மட்டுப்படுத்த நாம் விரும்பவில்லை. இவ்வாறான மத விவகாரங்கள் தொடர்பில் ஏதேனும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமெனில் அமைச்சின் அனுமதி பெறப்பட வேண்டும் என்ற சட்டத்தை அறிமுகப்படுத்தலாம். ஆனால் அனைவரும் மூத்தோர் என்ற அடிப்படையில் எம்மால் ஒழுக்கமாக நடந்து கொள்ள முடியுமல்லவா?

இந்நாட்டில் ஒழுக்கம் இல்லை. குறிப்பாக அரசியல்வாதிகளிடத்தில் ஒழுக்கம் இல்லை. அரசியல்வாதிகளிடம் ஒழுக்கமும் , சகிப்புத்தன்மையும் காணப்பட்டால், ஏனையோருக்கிடையிலும் சகிப்புத்தன்மையை உருவாக்க முடியும். இவை இந்து மற்றும் பௌத்தவாதங்களின் அடிப்படையாகும்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்த இவ்வாறான பிரச்சினைகள் இடம்பெறும் இடத்துக்குச் சென்றால் , தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரு பிரிவினரும் அங்கு செல்கின்றனர்.

அதனைத் தொடர்ந்து ஏனைய கட்சிகளும் அங்கு செல்கின்றன. வாக்குகளுக்காக அனைவரும் இவ்வாறு செயற்படுகின்றனர். மாறாக மக்கள் இவ்வாறான விடயங்களில் கவனம் செலுத்துவதில்லை.

இவை அரசியல் விளையாட்டுக்கள் என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். அதன் காரணமாகவே அம் மக்கள் இவர்களுக்கு வாக்களிப்பதில்லை. எனவே மதத்தை அடிப்படையாகக் கொண்டு அரசியல் விளையாட்டுக்களை விளையாட வேண்டாமென அரசியல்வாதிகளிடம் கேட்டுக் கொள்கின்றேன்.

இவ்விவகாரம் தொடர்பில் அடுத்த வாரம் அறிக்கை கிடைக்கப்பெறும். அதனை அடிப்படையாகக் கொண்டு தீர்மானம் எடுக்கப்படும். உண்மைகளை அறியாமல் என்னால் எதனையும் கூற முடியாது என்றார்.