உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கை குறித்து இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் அறிவிப்பு

98 0

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் மற்றும் அது குறித்த நிலைப்பாடு விரைவில் நாட்டுக்கு வெளிப்படுத்தப்படும் என இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் துணை செயலாளர் நாயகம் அருட்தந்தை டோனி மார்டின் தெரிவித்தார்.

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் கடந்த ஏப்ரல் 25ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கை கத்தோலிக்க ஆயர் பேரவையிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை தொடர்பில் இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் நிலைப்பாட்டை வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

குறித்த அறிக்கை இருவட்டுக்களாகவே கிடைக்கப் பெற்றுள்ளது. அதனை இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் சட்டத்தரணிகள் குழாம் ஆராய்ந்து வருகிறது. அறிக்கை முழுமையாக ஆராயப்பட்டதன் பின்னர் அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் மற்றும் அது குறித்த எமது நிலைப்பாடுகள் நாட்டுக்கு வெளிப்படுத்தப்படும்.

தற்போது வரை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஏனையோர் அறிந்துள்ள உண்மைகள் மாத்திரமே எமக்கும் தெரியும். எனவே எதிர்வரும் ஓரிரு வாரங்களுக்குள் எமது நிலைப்பாட்டை அறிவிக்க முடியும் என்றார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கை தமக்கு சமர்ப்பிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை மற்றும் கொழும்பு பேராயர் இல்லத்தினால் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்தது.

இந்நிலையிலேயே கடந்த மாதம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கமைய குறித்த அறிக்கை குருணாகல் மாவட்ட ஆயர் ஹெரல்ட் அன்டணி ஆண்டகையிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.