சென்னை விமான நிலைய மேம்பாட்டு கட்டணம் அதிகரிப்பு: டிக்கெட் கட்டணம் உயருகிறது

92 0

இந்தியாவில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு, அந்தந்த விமான நிலையங்களில் உள்ள அடிப்படை வசதிகளுக்கு தகுந்தபடி, ஒவ்வொரு விமான பயணிக்கும், உள்நாட்டு பயணிக்கும், அதே போல் சர்வதேச விமானங்களில் பயணிக்கும் பயணிக்கும், விமான நிலைய மேம்பாட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது ஒவ்வொரு விமான நிலையங்களுக்கும் மாறுபட்ட கட்டணமாக இருக்கும். இந்தியாவில் சென்னை, ஐதராபாத், பெங்களூர், மும்பை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட சர்வதேச விமான நிலையங்களில், இந்த கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.

சென்னை விமான நிலையத்தில் ஏற்கனவே, உள்நாட்டு விமான பயணிகள் ஒவ்வொருவருக்கும், ரூ.205-ம், சர்வதேச விமான பயணிகள் ஒவ்வொருவருக்கும், ரூ.300-ம், விமான நிலைய மேம்பாட்டு கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது இந்த கட்டணத்தை, மத்திய விமான நிலைய பொருளாதார ஒழுங்குமுறை ஆணையம், மாற்றி அமைத்துள்ளது. அதன்படி சென்னை விமான நிலையத்தில் பயணிக்கும், உள்நாட்டு விமான பயணிகள் ஒவ்வொருவருக்கும் ரூ.295, சர்வதேச விமானத்தில் பயணிக்கும் ஒவ்வொரு பயணிக்கும் ரூ.450 வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதாவது உள்நாட்டு விமான பயணிக்கு ரூ.90, சர்வதேச விமான பயணிக்கு ரூ.150 கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விமான நிலைய மேம்பாட்டு கட்டணம் பயணிகளிடம் தனியாக வசூலிக்கப்பட மாட்டாது. அவர்கள் பயணிக்கும் விமான டிக்கெட் கட்டணத்துடன் இணைத்து ஒன்றாக வசூலிக்கப்படும். அதன்பின்னர் அந்தந்த விமான நிறுவனங்கள், பயணிகளிடம் வசூலித்த விமான நிலைய மேம்பாட்டு கட்டணத்தை, இந்திய விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்கும். மேலும் இந்த கட்டணம், பயணிகள் புறப்படும் விமான நிலையத்தில் மட்டும் வசூலிக்கப்படும்.

அந்த பயணி சென்று இறங்கும் விமான நிலையத்தில், மேம்பாட்டு கட்டணம் தனியாக வசூலிக்கப்படமாட்டாது. இந்த கட்டண உயர்வு சென்னை விமான நிலையத்தில் மட்டும் இன்றி, நாடு முழுவதும் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் அமுல்படுத்தப்படுகிறது. ஆனால் அந்தந்த விமான நிலையங்களில், பயணிகளுக்கு இருக்கும் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு தகுந்தாற்போல், விமான நிலைய மேம்பாட்டு கட்டணம் மாறுபட்டு இருக்கும்.

இந்த கட்டணம் விமான டிக்கெட் கட்டணத்துடன் சேர்த்து வசூலிக்கப்படுவதால், பயணிகள் பலருக்கு, இந்த கட்டண உயர்வு பற்றி தெரியாது. எனவே இது மறைமுக கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

விமான பயணிகளிடம், விமான நிலைய மேம்பாட்டு கட்டணம் வசூலிக்கப்படும், சர்வதேச விமான நிலையங்களில், பயணிகளுக்கு அடிப்படை வசதிகள், உள் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு இருக்கவேண்டும் என்று, இந்திய விமான நிலைய ஆணைய விதிமுறைகளில் உள்ளது குறிப்பிடத்தக்கது.