சூடானில் கடும் சண்டைக்கு மத்தியில் குழந்தைகள் சிக்கித் தவிப்பு: ஐ.நா. தகவல்

84 0

சூடானில் கடும் சண்டைக்கு மத்தியில் குழந்தைகள் சிக்கி இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இது குறித்து ஐ.நா. சபை தரப்பில், “வியாழனன்று சூடானில் போர் நிறுத்த உடன்படிக்கை இருந்தபோதிலும் கடுமையான சண்டை நீடித்தது. பேச்சுவார்த்தைகளுக்கு இடையே சண்டைகள் தொடர்கின்றன. கடும் சண்டையில் குழந்தைகள் சிக்கி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, தலைநகர் கார்ட்டூமில் உள்ள நிலப்பரப்பை கட்டுப்படுத்துவதில் ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே கடுமையான மோதல் தொடர்கிறது.

இதுகுறித்து அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநர் அவ்ரில் ஹைன்ஸ் பேசும்போது, “இரு தரப்பும் ராணுவ ரீதியாக வெற்றி பெற முடியும் என்று நம்புகிறார்கள்” என்று கூறி இருக்கிறார்.

சூடான் உள் நாட்டுப் போர்: வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து ராணுவ தளபதி அப்தெல் அல் பர்ஹான் மற்றும் துணை ராணுவப் படை தலைவர் மொகமத் ஹம்தன் டக்லோ ஆகியோர் கடந்த 2021-ம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றினர்.

இதற்கிடையில், கருத்து வேறுபாடு காரணமாக ராணுவ தளபதி பர்ஹான் ஆதரவு படையினருக்கும் – துணை ராணுவ (ஆர்எஸ்பி) தலைவர் டக்லோ ஆதரவு படையினருக்கும் இடையே மோதல் தொடங்கியது. இதுவே தற்போது சூடானில் உள்நாட்டு போராக மாறியுள்ளது. போரில் இதுவரை ஏராளமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், சூடானில் சிக்கியுள்ள தங்கள் நாட்டு மக்களை மீட்க சம்பந்தப்பட்ட நாட்டின் தலைவர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சூடானில் வெளிநாட்டு தூதரகங்களில் பணியாற்றும் ஊழியர்களை சாலை, விமானம் மற்றும் கடல் மார்க்கமாக பத்திரமாக வெளியேற்றும் நடவடிக்கையில் அந்தந்த நாடுகள் ஈடுபட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.