முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தாம்பரம் மாநகர திமுக மற்றும் தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் இணைந்து நடத்தும் மாநில அளவிலான கபடி போட்டிகள் நேற்று தொடங்கி 7-ம் தேதி வரை மேற்கு தாம்பரத்தில் உள்ள கலைஞர் விளையாட்டுத் திடலில் நடைபெறுகிறது. இப்போட்டிகளில் 38 மாவட்ட அணிகள் பங்கேற்கின்றன.
இதன் தொடக்க விழாவில் தாம்பரம் மாநகராட்சி மண்டலத் தலைவர் டி.காமராஜ் வரவேற்றார். காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக தாம்பரம் மாநகர செயலாளர் எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏ தலைமை வகித்தார். போட்டிகளை திமுக இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது: சென்னையில் சர்வேச தரத்தில் ஹைடெக் விளையாட்டு மைதானம் அமையவுள்ளது. தவிர ஒவ்வொரு தொகுதியிலும் மினி விளையாட்டு மைதானம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. விளையாட்டு வீரர்களின் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்யும் வகையில் தமிழ்நாடு சாம்பியன்ஸ் பவுண்டேஷன் என்ற திட்டத்தை தனியார் பங்களிப்புடன் தமிழக முதல்வர் நாளை மறுதினம் (மே 8) தொடங்கி வைக்கவுள்ளார். இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி துணைச் செயலாளர் பொன் கவுதம சிகாமணி எம்பி, பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் ஜி.காமராஜ், தாம்பரம் மாநகராட்சி மண்டலத் தலைவர் எஸ்.இந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
முன்னதாக கபடி போட்டிகளின்போது உயிரிழந்த 10 வீரர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சத்தை தாம்பரம் மாநகர திமுக சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். திமுக இளைஞரணி அறக்கட்டளைக்கு ரூ.5 லட்சத்துக்கான காசோலை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் தாம்பரம் மாநகர திமுக சார்பில் வழங்கப்பட்டது.