இலங்கையின் அணிசேரா கொள்கையை மதிக்கின்றோம்

93 0

இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். இலங்கை அரசாங்கம் தற்போது பின்பற்றுகின்ற அணிசேரா கொள்கையை நாம் மதிப்பதாக இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவான் எஸ்.டகர்யான் தெரிவித்துள்ளார்.

மேலும், உக்ரைன் நாட்டை மாத்திரமின்றி யுத்தத்துக்கு அனுசரணை வழங்கும் ஏனைய மேற்குலக நாடுகளையும் ரஷ்யா மீண்டும் தோல்வியடையச் செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாம் உலக யுத்தத்தின்போது உயிர் நீத்த ரஷ்ய இராணுவத்தினரை நினைவுகூரும் வகையில் கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்தினால் தேசிய பொது நூலகத்துக்கருகில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிக்கருகில் வியாழக்கிழமை (4) நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணவர்தனவும் கலந்துகொண்டிருந்தார். இதன் போது உரையாற்றுகையிலேயே ரஷ்ய தூதுவர் இதனை தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

இரண்டாம் உலக யுத்தத்தின்போது ஏற்படுத்தப்பட்ட அழிவுகளை எதிர்கொண்டு உயிர் நீத்த இராணுவ வீரர்களை நினைவுகூரும் நிகழ்வு உலகளாவிய ரீதியில் 11 நாடுகளில் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த 11 நாடுகளில் இலங்கையும் உள்ளடங்குகிறது.

இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். அதற்கு ரஷ்ய அரசாங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். அதே போன்று இலங்கை அரசாங்கம் தற்போது பின்பற்றுகின்ற அணிசேரா கொள்கையை நாம் மதிக்கின்றோம்.

தற்போது ரஷ்யாவில் மீண்டும் யுத்த நிலைமை ஏற்பட்டுள்ளது. உக்ரைன் மாத்திரமின்றி மேற்குலக அனுசரணையாளர்களையும் மீண்டும் தோல்வியடைச் செய்ய தயாராகவுள்ளோம். எனவே, அவர்கள் மீண்டும் ரஷ்யாவுக்கு எதிராக யுத்தத்தை ஆரம்பித்தால் 1945ஐ போன்று நாம் அவர்களை தோல்வியடைச் செய்வோம். நாம் இந்த யுத்தத்தை தோல்வியடைச் செய்வோம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றார்.