கடன் மறுசீரமைப்பு குறித்த செயற்திட்டம் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும்

85 0

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைக்கு அமைவாக இலங்கை அதன் கடன் மறுசீரமைப்பு குறித்த செயற்திட்டத்தை இம்மாத இறுதிக்குள் அறிவிக்குமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதி செயற்திட்டத்தின்கீழ் சுமார் 3 பில்லியன் டொலர் கடனுதவியைப் பெற்றுக்கொள்வதற்கான இறுதிக்கட்ட இணக்கப்பாடு கடந்த மார்ச் மாதம் எட்டப்பட்ட நிலையில், கடன் மறுசீரமைப்பு குறித்த செயற்திட்டத்தை ஏப்ரல்மாத இறுதிக்குள் வெளியிடுவதற்கு எதிர்பார்த்திருப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஏற்கனவே அறிவித்திருந்தார். இருப்பினும் அச்செயற்திட்டம் கடந்த மாதம் வெளியிடப்படாத நிலையிலேயே, இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி எதிர்பார்க்கப்படும் வருமான அடைவை ஓரளவுக்கு எட்டியதன் பின்னர், தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள வரிவீதங்களை அடுத்துவரும் 5 வருடகாலத்தில் படிப்படியாகக் குறைப்பதற்குத் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தற்போது எமது நாட்டின் மொத்தக் கடன்சுமையானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 128 சதவீதமாகக் காணப்படுவதாகவும், இதனை அடுத்த சில வருடங்களில் 95 சதவீதமாகக் குறைப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள ரஞ்சித் சியம்பலாபிட்டிய, ‘கடன் மற்றும் வரிச்சுமையைக் குறைப்பதற்கு ஏதுவான பொருத்தமான செயற்திட்டத்துடன் நாம் முன்நோக்கிப் பயணிக்கின்றோம்’ என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இருப்பினும் இன்னமும் சில கடினமான இலக்குகளை அடைந்துகொள்ளவேண்டியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், ‘நாம் மேற்கொள்வதற்குத் தீர்மானித்துள்ள பயணம் இலகுவானதோ அல்லது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதோ அல்ல. ஆனால் தற்போது கிட்டியிருக்கும் வெற்றிகளுடன் முன்நோக்கிப் பயணிப்பதே சிறந்தது என்று நான் கருதுகின்றேன்’ என்று தெரிவித்துள்ளார்.