குடியரசு கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராக டொனால்ட் டிரம்ப்

501 0

201607200846011823_Republican-Party-nominates-Trump-as-presidential-candidate_SECVPFஅமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி தேர்தல் நடக்கிறது.
இதில் களம்காண உள்ள குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான பிரைமரி தேர்தல்கள் பல்வேறு மாகாணங்களில் நடந்து வந்தன. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக, முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவியும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான ஹிலாரி கிளிண்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் பதவி வேட்பாளராக ஜனநாயக கட்சியின் சார்பில் அமோக ஆதரவை பெற்றுள்ள ஹிலாரி கிளிண்டனுக்கு அதிபர் பராக் ஒபாமா வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டினரையும், வந்தேறிகளையும் அமெரிக்காவை விட்டு விரட்டியடிப்பேன். இந்த நாட்டின் அதிபராக நான் பதவி ஏற்றால் வெளிநாட்டில் இருந்துவந்து அமெரிக்காவில் சட்டப்புறம்பாக குடியேறியுள்ளவர்களை அடித்து விரட்டுவேன் என டொனால்ட் டிரம்ப் பேசி வருகிறார். அமெரிக்கர்களின் வேலையை இந்தியர்கள் பறித்து சென்றுவிடுவதாகவும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

அவ்வப்போது, சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து விமர்சனங்களை தேடிக்கொள்வதிலும் நிகரில்லாதவராக விளங்கி வரும் டொனால்ட் டிரம்புக்கு ஆதரவாக அவரது மனைவி மெலினியா டிரம்ப் தற்போது பிரசார களத்தில் குதித்துள்ளார்.

இந்நிலையில், கிளிவ்லேண்ட் பகுதியில் நடைபெற்ற குடியரசு கட்சியின் தேசிய பிரதிநிதிகள் மாநாட்டில் அக்கட்சியின் அதிகாரபூர்வ அதிபர் வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் இன்று அறிவிக்கப்பட்டார்.

அதிபர் பதவி வேட்பாளர்களுக்கான உள்கட்சி தேர்தலில் 1725 வாக்குகளை பெற்ற டொனால்ட் டிரம்ப், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் நமது கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார் என பலத்த கரவொலிக்கு இடையில் தேசிய பிரதிநிதிகள் மாநாட்டின் தலைவர் பால் ரியான் அறிவித்தார்.

டிரம்புக்கு அடுத்தபடியாக டெட் குருஸ் 475 வாக்குகளையும், ஜான் காசிச் 120 வாக்குகளையும், மார்கோ ருபியோ 114 வாக்குகளையும் பெற்றிருந்தனர். ஓராண்டுக்கு முன்னரே அரசியலில் நுழைந்த டிரம்ப், குடியரசு கட்சியில் பழம்தின்று கொட்டைப்போட்ட மூத்த அரசியல்வாதிகளை எல்லாம் தனது ‘செல்வாக்கால்’ பின்னுக்குத்தள்ளிவிட்டு, தற்போது அமெரிக்க அதிபர் வேட்பாளர் என்ற நிலைக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நவம்பர் 8-ம் தேதி நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடும் முன்னாள் அமெரிக்க அதிபரான பில் கிளிண்டனின் மனைவியும், அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியுமான ஹிலாரி கிளிண்டனுடன் டொனால்ட் டிரம்ப் மோதுவது உறுதியாகி விட்டது.

அமெரிக்காவின் பிரபல ஊடகங்கள் சமீபத்தில் நடத்திய கருத்துக் கணிப்பில், ஹிலாரி கிளிண்டன் அமெரிக்காவின் அதிபராக 51 சதவீதம் மக்களும் அவரை எதித்து போட்டியிடவுள்ள டொனால்ட் டிரம்புக்கு 39 சதவீதம் மக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.