உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனுத்தாக்கல் செய்ய அரச ஊழியர்கள் பிறிதொரு தேர்தல் தொகுதியில் சேவையாற்றுவது தொடர்பான சுற்றறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை வெளியிடப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜானக வகும்பர தெரிவித்தார்.
விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்கள் மீண்டும் சேவையில் ஈடுபடல் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
நிதி நெருக்கடி காரணமாக உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு தொடர்ந்து இழுபறி நிலையில் உள்ளது.தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுத்தாக்கல் செய்ய 7 ஆயிரத்துக்கும் அதிகமான அரச சேவையாளர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
தேர்தல் இழுபறிக்கு மத்தியில் சம்பளமில்லாமல் விடுமுறையில் இருந்த அரச சேவையாளர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு அரசியல் தரப்பினர் தொடர்ந்து வலியுறுத்தினார்கள். தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆலோசனைகளுக்கு அமைய இவர்களுக்கு அடிப்படை சம்பளம் வழங்கி அமைச்சரவை தீர்மானித்தது.அதற்கமைய கடந்த மாதம் 10 ஆம் திகதி விடுமுறையில் இருந்த அரச சேவையாளர்களுக்கு அடிப்படை சம்பளம் வழங்கப்பட்டது.
பொருளாதார பாதிப்பு காரணமாக அரச சேவைக்கான நியமனங்கள் வரையறுக்கப்பட்ட நிலையில் 7 ஆயிரத்துக்கும் அதிகமான அரச சேவையாளர்கள் தொடர்ந்து விடுமுறையில் இருப்பதால் அரச சேவையில் ஆளணி பற்றாக்குறை தோற்றம் பெற்றுள்ளது.உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்பு நிச்சயமற்ற தன்மையில் உள்ள பின்னணியில் விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும்.
விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்களை மீண்டும் சேவைக்கு இணைத்துக் கொள்வது தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஆலோசனை கோரியிருந்தோம். அரச சேவையாளர் போட்டியிடவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொகுதியில் சேவையாற்றாமல் பிறிதொரு தேர்தல் தொகுதியில் சத்தியகடதாசி ஊடாக சேவையாற்ற அனுமதிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு ஆலோசனை வழங்கியது.இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அரச சேவையாளர்கள் மீண்டும் சேவையில் ஈடுபடுவது தொடர்பான விசேட சுற்றறிக்கை திங்கட்கிழமை (08) வெளியிடப்படும். உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகம் சிறந்த முறையில் முன்னெடுக்கப்படுகிறது.மாகாண ஆளுநர்களின் கண்காணிப்புக்கு கீழ் அடிப்படை நிர்வாக பணிகள் துரிதமாக இடம்பெறுகிறது என்றார்.