சீரற்ற காலநிலையால் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு

139 0

நாட்டில் கடந்த சில தினங்களாக நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக பல மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இக்காலநிலை இன்றும் தொடரக் கூடும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக பதுளை , திருகோணமலை, இரத்தினபுரி, கேகாலை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, புத்தளம் மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களே அதிகளவில் பாதிக்கபட்டுள்ளன.

இம்மாவட்டங்களில் கடும் மழை, காற்று , மரம் முறிந்து விழுந்தமை , மின்னல் தாக்கம்  என்பவற்றால் 110 குடும்பங்களைச் சேர்ந்த 437 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை பதுளை , காலி , கேகாலை , மாத்தளை , மாத்தறை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கையும் நீடிக்கப்பட்டுள்ளது.

பதுளை மாவட்டத்தில் பதுளை, ஹல்துமுல்லை, ஹாலிஎல, பசறை பிரதேச செயலகப்பிரிவுகளுக்கும் , காலியில் பத்தேகம, யக்கலமுல்ல, எல்பிட்டி மற்றும் நாகொட பிரதேச செயலகப்பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதே போன்று கேகாலையில் கேகாலை பிரதேச செயலகப்பிரிவுக்கும் , மாத்தளையில் பல்லேபொல பிரதேச செயலகப்பிரிவுக்கும், மாத்தறையில் கொடபொல மற்றும் பஸ்கொட பிரதேச செயலகப்பிரிவுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் , நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் இடைக்கிடை மழை பெய்யக் கூடும் என்பதோடு , சில பகுதிகளில் 50 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை வேளைகளில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். மேற்கு மற்றும் தெற்கு கடற் பகுதிகளில் மணித்தியாலத்துக்கு 40 – 50 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும். இவ்வாறான சீரற்ற காலநிலையால் ஏற்படக் கூடிய அனர்த்தங்களிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.