தனியார் நிறுவனமொன்றை பதிவு செய்து அதில் முதலீடு செய்பவர்களுக்கு அதிகம் இலாபம் பெற்றுத் தருவதாகக்கூறி 3 கோடி ரூபாய் நிதி மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் புதன்கிழமை (03) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேக நபர் கோகலை பகுதியில் தனியார் நிறுவனமொன்றை பதிவு செய்துள்ளதுடன், நிதி முதலீடுகளுக்காக பெரும் இலாபம் பெற்றுத்தருவதாக உறுதியளித்து பொதுமக்களிடமிருந்து பணத்தை பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பில் கேகாலை பொலிஸில் பதிவு செய்யப்பட்ட 9 முறைப்பாடுகளின் அடிப்படையில் சந்தேக நபர் கேகாலை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 40 வயதுடைய கேகாலை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
சந்தேக நபர் கேகாலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கேகாலை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.