முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக அபிவிருத்தி குழு கூட்டம் புதன்கிழமை (3) பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தலைமையில் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்ட இராணுவ அதிகாரி ஒட்டுசுட்டான் நகர மையப்பகுதியில் நீர்ப்பாசன திணைக்களத்தின் 25 ஏக்கர் காணி, இரண்டு தனிநபர் காணிகள் மற்றும் இந்து மயானம் ஆகியவற்றை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள 64ஆவது படைப்பிரிவு முகாமுக்கான காணி ஆவணங்களை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
அதற்கு பதிலளித்த பிரதேச செயலாளர், மக்களின் காணிகள், இந்து மயானம் என்பன விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், இன்னும் விடுவிக்கப்படவில்லை.
எஞ்சியிருக்கும் அபகரிக்கப்பட்ட 25 ஏக்கர் தொடர்பில் நீர்ப்பாசன திணைக்களம் தமது கருத்தினை இதுவரை வழங்கவில்லை. அவர்களுடைய கருத்துக்குப் பின்னரே இவ்விடயம் தொடர்பாக முடிவெடுக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பல காலமாக மயானம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதி மக்கள் மயானத்துக்கு பல மைல்கள் செல்லவேண்டிய நிலை காணப்படுகிறது. ‘விடுவிக்கிறோம்’ என ஏமாற்றி வருகின்றனர் என கூறும் மக்கள், மயானத்தை விரைவில் விடுமாறும் சிரமங்களை எதிர்கொள்ளும் நிலையில் மேலும் தெரிவித்துள்ளனர்.