தேசிய கொள்கை ஆணைக்குழு தொடர்பான சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்

88 0

தேசியக் கொள்கை ஆணைக்குழுவை நிறுவுவதற்கான வழிகாட்டல்கள் தொடர்பில் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உப குழுவில் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர் மற்றும் பொதுமக்களின் கருத்துகள், ஆலோசனைகளைப் பெற்று தேசிய கொள்கை ஆணைக்குழு தொடர்பான சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என உப குழுவின் தலைவர்  நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உப குழு அதன் தலைவர்  நாமல் ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயம் பற்றிக் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், இந்நாட்டில் உள்ள அனைத்து அரசாங்க நிறுவனங்களின் கொள்வனவுச் செயற்பாடுகளுக்கும் இலத்திரனியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக முன்னைய கூட்டத்தில் வழங்கப்பட்ட பணிப்புரைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் இங்கு கவனத்தில் கொள்ளப்பட்டது.

இந்த முறையை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்களை தயாரிக்க வேண்டியதன் அவசியத்தை உபகுழுவின் தலைவர்  நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார். இதற்கு அமைய இந்த வருடத்தின் ஜூன் மாதத்திற்குள், பல அமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுக்களில் இதனை பரீட்சிக்கும் வகையில் பயன்படுத்தத் திட்டமிட்டிருப்பதாகவும் வருகைதந்திருந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசாங்க நிறுவனங்களை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் எளிதான மற்றும் விரைவான சேவையை வழங்க முடியும் என்பது பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிலையத்தின் அதிகாரிகள் இதற்காக திட்டமிடப்பட்ட வேலைத்திட்டம் மற்றும் அதன் தற்போதைய நிலை குறித்து விளக்கமளித்தனர்.