குவைத்தில் வீட்டுப் பணிப்பெண்களாகச் சென்று கடந்த ஏப்ரல் மாதம் அந்நாட்டில் உயிரிழந்த இரு இலங்கை பெண்களுக்கு குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் உதவிகளை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக தூதரகத்தின் ஊடகப் பிரிவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி ராகம பகுதியைச் சேர்ந்த சந்தியா குமுதினி என்ற 58 வயதான வீட்டுப் பணிப்பெண் குவைத் ‘நயீம்’ பகுதியில் உள்ள வங்கிக்கு சென்றுகொண்டிருந்தபோது கார் மோதி உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து அங்கு சென்ற இலங்கை தூதரக அதிகாரிகள் குறித்த பெண்ணின் சடலத்தை வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
இதேவேளை, குறித்த பெண்ணின் சடலத்தை விரைவில் இலங்கைக்கு அனுப்புவதற்கும், அவர் பணி புரிந்த வீட்டின் எஜமானர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய 21 வயது குவைத் இளைஞரை குவைத் பொலிஸார் கைதுசெய்து, அவர் மீது நேரில் கண்ட சாட்சிகள் மற்றும் வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து, அவரது குடும்பத்தினரிடமிருந்து 5 கோடி ரூபாயை நஷ்ட ஈடாக வழங்க குவைத்தில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், கடந்த ஏப்ரல் மாதம் 26 அன்று, மாத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த அனோமா என்ற 59 வயதான இலங்கை பணிப்பெண் குவைத்தில் உயிரிழந்துள்ளார்.
கடந்த வருடங்களாக பணிபுரிந்து வந்த அவர் குவைத்தின் ஜஹாரா பகுதியில் உள்ள வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்.
இந்த மரணம் தொடர்பில் அந்நாட்டு சட்டமா அதிபரினால் வெளியிடப்பட்ட சட்ட வைத்திய மருத்துவ அறிக்கைகள், பொலிஸ் அறிக்கைகள், பிரேத பரிசோதனை அறிக்கைகள் என்பனவற்றை பெற்றுக்கொள்ள குவைத்தில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
மேலும், இந்த பணிப்பெண் பணிபுரிந்த வீட்டின் எஜமானரை இலங்கை தூதரகத்துக்கு அழைத்து சிறப்பு விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சடலத்தை உடனடியாக இலங்கைக்கு அனுப்புவதற்கான செலவை எஜமானரிடமிருந்து பெற்றுக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.