வருமான வரித்துறை சோதனையில் ரூ.3.5 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை முற்றிலும் மறுக்கிறோம் என்றும், எங்கள் நிறுவனத்துக்கும் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும், குறிப்பிட்ட குடும்பத்தினருக்கும் தொடர்பில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜி ஸ்கொயர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற வருமானவரித்துறை சோதனை தொடர்பாக அந்த நிறுவன மேலாண் இயக்குநர் பாலா என்ற ராமஜெயம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: குறிப்பிட்ட நிதி பரிவர்த்தனைகளில் தகவல்கள், விளக்கங்கள் கோரும் வகையில், நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவது வழக்கமான நடவடிக்கைதான். நாடு முழுவதும் கடந்த சில மாதங்களில் இத்தகைய சோதனைகளை வருமான வரித்துறையினர் ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் நடத்தியுள்ளனர்.
அந்த வகையில், கடந்த ஒரு வாரமாக எங்கள் நிறுவன அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளித்துள்ளோம். நாங்கள், அவர்கள் கோரிய எங்களது தற்போதைய கட்டுமானத் திட்டங்கள், வருவாய் தொடர்பான எங்களது ஆவணங்கள் மற்றும் தகவல்கள் அனைத்தையும் அளித்துள்ளோம். எங்களது அனைத்து வர்த்தக நடவடிக்கைகளும் முழுமையாக இந்திய வருமான வரி மற்றும் பொருளாதார சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டவை என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
எப்போதுமே எங்களின் வர்த்தகத்தில் உயர்ந்த மதிப்பீடுகளையும் அறநெறிகளையும் நாங்கள் பின்பற்றி வருகிறோம்.
அரசியல் கட்சிக்கு தொடர்பில்லை: எங்கள் நிறுவனத்துக்கும் குறிப்பிட்ட அரசியல் கட்சி மற்றும் குறிப்பிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை வருமான வரித்துறையினர் எங்களிடம் நடத்திய விசாரணைகளில் உறுதிபடுத்தியுள்ளனர். இந்த விசாரணை எங்களது சொத்தின் மொத்த மதிப்பு ரூ.38 ஆயிரம் கோடி என எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல், தவறாக பரப்பப்பட்ட குற்றச்சாட்டுகளை அகற்றியுள்ளது.
இதன் மூலம், உண்மையான தகவலை பொதுமக்களுக்கு தெரிவிக்கவும், மத்திய அரசின் அதிகாரிகளுக்கு எங்கள் நிலைப்பாட்டை நிரூபிப்பதற்கும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணி நிம்மதியடைகிறோம். அதேநேரம், ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் நடைபெற்ற வருமான வரிசோதனை தொடர்பாக குறிப்பிட்ட சில ஊடகங்களால் திட்டமிட்டு பரப்பப்பட்ட அடிப்படை ஆதாரமற்ற செய்தி எங்களை பெரிதும் கவலையடையச் செய்துள்ளது. மேலும், இந்த சோதனையின்போது ரூ.3.5 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்ட குற்றச்சாட்டை நாங்கள் முற்றிலுமாக மறுக்கிறோம்.
நற்பெயரை சீர்குலைக்கும் நோக்கம்: வருமான வரித்துறையினரிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு உள்ளபோது, இதுபோன்ற குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்ற, திசைதிருப்பும் வகையில் நிறுவனத்தின் நற்பெயரை சீர்குலைக்கும் நோக்கில் உள்ளது. செய்தியை வெளியிடும் முன் அதை உறுதிப்படுத்தி வெளியிடுமாறு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பதிவிடும் தனி நபர்களையும் கேட்டுக் கொள்கிறோம்.
கடந்த 15 ஆண்டுகளாக இத்துறையில் செயல்படும் எங்கள் நிறுவனத்தின் மூலமாக 33 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு வழங்கியுள்ளோம். மத்திய மாநில அரசுகளுக்கு ரூ.1000 கோடி அளவுக்கு வருமானவரி, ஜிஎஸ்டி மற்றும் முத்திரைத்தாள் கட்டணமாக செலுத்தியுள்ளோம். நாங்கள் வழக்கம் போல் தொடர்ந்து செயல்படுவோம் என எங்களைச் சார்ந்த பயனாளர்களுக்கு உறுதியளிக்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.