ரணிலை பொது வேட்பாளராக்க பிரதான கட்சிகளிடையே பேச்சு

92 0

ஜனாதிபதி தேர்தலை முன் கூட்டி நடாத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அரசாங்கம் ஏற்கனவே கலந்துரையாடி வருகின்ற நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பொது வேட்பாளராக்குவது குறித்து பிரதான கட்சிகளிடையே பேச்சு வார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் முதல் கட்ட பேச்சு வார்த்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசிய கட்சியினருக்கும் இடையில் இடம்பெற்றுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோரும் தனித்தனியே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து கடந்த வாரம் இறுதியில் கலந்துரையாடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி தேர்தலை முன் கூட்டியே நடாத்துவதற்கான நோக்கத்திற்கு அமையவே உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்தப்பட வில்லை. அந்த வகையில் 2023 ஆண்டில் முதல் காலாண்டில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான முன்னெடுப்புகளில் அரசாங்கம் ஈடுப்பட்டு வருகின்றது.

அவ்வாறு முன் கூட்டி வைக்கப்படும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை களமிரக்கும் கட்சி மட்ட செயல்பாடுகளை ஐக்கிய தேசிய கட்சி மிக தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. நாடளாவிய ரீதியில் கிராமிய மட்டத்திலிருந்து முழு அளவில் செயல்படும் ஐக்கிய தேசிய கட்சி,  தேசிய அளவில் ஏனைய கட்சிகளின் ஆதரவுகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளது.

அடுத்து வரக்கூடிய ஜனாதிபதி  தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் கூட்டணியமைப்பது தொடர்பில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகள் மட்டத்திலும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த கலந்துரையாடல்களில் ஏற்பட்ட இணக்கப்பாட்டிற்கு அமைவாகவே பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு ஆதரவுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது பதவியில் உள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பொது வேட்பாளராக ஏற்று, அவருக்கு ஆதரவை பெற்றுக்கொடுப்பது குறித்து அந்தந்த கட்சிகள் உள்ளக பேச்சு வார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றது.

பொது வேட்பாளர் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷpல் ராஜபக்ஷ கட்சி மட்டத்தில் முன்னெடுத்த கலந்துரையாடல்களின் போது, பொதுஜன பெரமுனவை தலைமைத்துவமாக கொண்ட அரசியல் கூட்டணியில் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக களமிரக்கவும் அதன் பின்னர் வரக்கூடிய எந்தவொரு தேர்தலிலும் அதே கூட்டணியில் போட்டியிடவுமான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டார்.

அதே போன்று  தேர்தலின் பின்னர் பிரதமர் பதவியை பொதுஜன பெரமுனவிற்கு வழங்க வேண்டும் என்ற வலியுறுத்தலும் இதன் போது முன்வைக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் பொது வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு வழங்குவதற்கு பொதுஜன பெரமுனவில் சாதகமான பேச்சு வார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள்ளும் அடுத்து வரக்கூடிய ஜனாதிபதி தேர்தலில் தனித்து போட்டியிடாது கூட்டணியமைப்பது குறித்து பரந்துப்பட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றனர். ஆனால் பொது வேடபாளருக்க ஆதரவளிப்பது குறித்தோ அல்லது மாற்று கூட்டணியில் இணைவது குறித்தோ இதுவரையில் தீர்மானிக்கப்பட வில்லை.

மறுப்புறம் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியுடன் மற்றுமொரு அரசியல் கூட்டணிக்கான சாத்தியக்கூறுகள் குறித்து பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயல்படுவதாக கூறும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதிருப்தி குழு அவதானம் செலுத்தியுள்ளன. அதே போன்று  பாராளுமன்றத்தில் உள்ள சிறுபான்மை கட்சிகள் பலவும் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்குவது குறித்து உள்ளக பேச்சு வார்த்தைகளை முன்னெடுத்துள்ளதுடன் குறிப்பிட்ட சில சிறுபான்டை கட்சிகளின் உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கும் சாயலை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சியை பொறுத்த வரையில் தனித்து தேர்தலில் களமிரங்குவதற்கு பதிலாக, பாராளுமன்றத்தை பிரதிநிதித்தும் செய்யக் கூடிய அரசியல் கட்சிகள் அல்லது உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுக்கொள்வதில் கூடுதல் ஆர்வத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றன. இவ்வாறு கூட்டணியமைக்கப்பட்டால் மாற்று சின்னம் ஒன்றுக்கு செல்வாது ‘யானை’ சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுவதற்கே கட்சியின் தொகுதி அமைப்பாளர் கூட்டங்களில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆனால் கூட்டணியெனும் வரும் போது, பொது இணக்கப்பாட்டின் அடிப்படையில் இந்த விடயங்கள் தீர்மானிக்கப்படும் என்பதே ஐ.தே.கவின் உள்ளக தகவல்கள் கூறுகின்றன. மறுப்புறம், பொது வேட்பாளர் என்ற விடயத்தை மேலும்  உறுதிப்படுத்தும் வகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசிய கட்சியின் நிகழ்வுகளில் கலந்துக்கொள்ளாது, கட்சிசார்பின்மையை வெளிப்படுத்தி வருகின்றார். குறிப்பாக ஐக்கிய தேசிய கட்சியின் மே தின கூட்டத்தில் கூட கலந்துக்கொள்ளாது தான் கட்சிசார்பற்ற ஜனாதிபதி என்பதை பகிரங்கப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.