கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தையும், எதிர்ப்புப்போராட்டங்களையும், கேள்வி எழுப்புதலையும் சகித்துக்கொள்ளமுடியாத அரசாங்கத்தின் ஒடுக்குமுறைகளால் இலங்கையில் ஊடக சுதந்திரத்துக்கான இடைவெளி வெகுவாக சுருக்கமடைந்துள்ளது என்று சர்வதேச மன்னிப்புச்சபையின் தெற்காசியப்பிராந்திய ஆய்வாளர் த்யாகி ருவன்பத்திரண தெரிவித்துள்ளார்.
உலக பத்திரிகை சுதந்திர தினமான புதன்கிழமை (03) இலங்கையில் ஊடக சுதந்திரம் எவ்வாறான நிலையில் உள்ளது என்பது குறித்தும், அண்மையகாலங்களில் ஊடகவியலாளர்களுக்கு எதிராகப் பிரயோகிக்கப்பட்டுவரும் ஒடுக்குமுறைகள் தொடர்பிலும் கேசரியிடம் கருத்து வெளியிடுகையிலேயே சர்வதேச மன்னிப்புச்சபையின் செயற்பாட்டாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கையைப் பொறுத்தமட்டில் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தையும், எதிர்ப்புப்போராட்டங்களையும், விமர்சனங்களையும், கேள்வி எழுப்புதலையும் சகித்துக்கொள்ளமுடியாத அரசாங்கத்தின் ஒடுக்குமுறைகளால் அண்மையகாலங்களில் ஊடக சுதந்திரத்துக்கான இடைவெளி என்பது மிகவும் சுருக்கமடைந்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
அத்தோடு ‘ஊடகங்களை அமைதிப்படுத்துவதற்காக சட்டங்களை முறைகேடாகவும், ஓர் ஆயுதமாகவும் பயன்படுத்துவது வழமையான விடயமாக மாறியுள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணிபுரியும் சிறுபான்மையின ஊடகவியலாளர்கள் இதனால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்’ என்றும் த்யாகி ருவன்பத்திரண குறிப்பிட்டார்.
மேலும் தகவல் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கும், மனித உரிமைகளை வலுப்படுத்துவதற்கும் ஊடக சுதந்திரம் என்பது இன்றியமையாததாகும் என்று வலியுறுத்திய அவர், ‘ஊடகவியல் ஓர் குற்றமல்ல’ என்றும் தெரிவித்தார்.