எரிபொருள், எரிவாயு ஆகியவற்றின் விலை குறைப்புக்கு அமைய பாண் உட்பட வெதுப்பக (பேக்கரி) உணவு பொருட்களின் விலையை குறைக்க முடியாது.
ஒரு புறம் விலையை குறைத்து மறுபுறம் மூலப்பொருட்களின் விலையை அதிகரிக்கும் போது விலை குறைப்பது சாத்தியமற்றது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ஜயவர்தன தெரிவித்தார்.
பேக்கரி உணவு பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
எரிபொருள் மற்றும் எரிவாயு ஆகியவற்றின் விலை குறைப்புக்கு அமைய பாண் உட்பட வெதுப்பக உணவு பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது. அரசாங்கத்தின் முறையற்ற தீர்மானங்களினால் எமது தொழிற்துறை பாரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
ஒருபுறம் விலையை குறைத்து மறுபுறம் கோதுமை மா,சீனி,முட்டை ஆகியவற்றின் விலை பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான பின்னணியில் எரிபொருள், எரிவாயு ஆகியவற்றின் விலை குறைப்புக்கு அமைய எவ்வாறு பேக்கரி உணவு பொருட்களின் விலையை குறைக்க முடியும்.
மின்கட்டணம் முறையற்ற வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதால் எமது தொழிற்துறை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இப்பிரச்சினைகள் தொடர்பில் விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சரிடம் பலமுறை கலந்துரையாடி கோரிக்கைகளை முன்வைத்தோம்.
இருப்பினும் எவ்வித பயனும் இதுவரை கிடைக்கவில்லை. மூலப்பொருட்களின் விலை குறைவடைந்தால் பாண் உட்பட ஏனைய உணவு பொருட்களின் விலையை குறைக்கலாம் என்றார்.