உலகின் பல நாடுகளில் பத்திரிகை சுதந்திரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது என எல்லைகள் அற்ற நிருபர்கள் அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.
உலகின் பல நாடுகளில் பத்திரிகை சுதந்திரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது தவறான தகவல் பிரச்சாரம், செயற்கை நுண்ணறிவு ஆகியவை பத்திரிகைக்கு அதிகரித்துவரும் அச்சுறுத்தல்களை தீவிரப்படுத்தியுள்ளன என எல்லைகள் அற்ற செய்தியாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகில் 31 நாடுகளில் மிகவும் பாரதூரமான நிலை காணப்படுகின்றது இது முன்னொருபோதும் இல்லாதநிலை என எல்லைகள் அற்ற நிருபர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஏதேச்சதிகார அரசாங்கங்களின் வன்முறை போக்குகளும் ( சில நாடுகள் ஜனநாயக நாடுகள் என கருதப்படுபவை) பெருமளவு தவறான தகவல்கள் பிரச்சாரங்களும் இணைந்து நிலைமையை மிகமோசமானவையாக்கிவிட்டன என எல்லைகள் அற்ற நிருபர்கள் அமைப்புதெரிவித்துள்ளது.
பத்திரிகைகளை மௌனமாக்கும் தங்கள் முயற்சிகள் குறித்து ஏதேச்சதிகார தலைவர்கள் அதிகளவு துணிச்சல் மிக்கவர்களாக மாறிவரும் நிலையில்எல்லைகள் அற்ற அமைப்பின் வரைபடத்தில் முன்னரை விட அதிகளவு சிவப்பு காணப்படுகின்றது என எல்லைகள் அற்ற செய்தியாளர் அமைப்பின் செயலாளர் நாயகம் கிறிஸ்டோப் டிலோயர் கார்டியனிற்கு தெரிவித்துள்ளார்.
இந்த யதார்த்தம் குறித்து உலக நாடுகள் விழித்தெழவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் இந்த ஆபத்தான போக்கை மாற்றியமைப்பதற்காக தீர்க்கமாகவும் வேகமாகவும் செயற்படவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.–
கருத்துசுதந்திரத்தை உறுதிப்படுத்தவேண்டியதன் அவசியத்தை உலகநாடுகளின் அரசாங்கங்களிற்கு வலியுறுத்துவதற்காக உலக பத்திரிகை சுதந்திர தினம் உருவாக்கப்பட்டு இன்றுடன் 30 வருடங்களாகின்றது.
எனினும்; உலகின் பத்தில் ஏழு நாடுகளில் பத்திரிகை சூழல மோசமானதாக காணப்படுகின்றது.பத்தில் மூன்று நாடுகளில் மாத்திரம் பத்திரிகை சூழல் திருப்திகரமானதாக காணப்படுகின்றது என எல்லைகள் அற்ற நிருபர் அமைப்பு தெரிவித்துள்ளது.
எல்லைகள் அற்ற நிருபர்கள் அமைப்பு 180 நாடுகளில் பத்திரிகையாளர்களிற்கு பொதுநலன் அடிப்படையில்- இடையூறுகள் இன்றி தங்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இன்றி செய்திகளை வெளியிடுவதற்கு உள்ள சூழல்- சுதந்திரம் குறித்து தனது ஆய்வில் கவனம் செலுத்தியுள்ளது.
இந்த ஆய்வின் போது வேகமாக வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள் ,அரசாங்கங்களும் அரசியல்செயற்பாட்டாளர்களும் யதார்த்தத்தை திரிபுபடுத்துவதற்கு உதவுவது தெரியவந்துள்ளது.
போலியான உள்ளடக்கங்களை புகுத்துவது இலகுவாகியுள்ளது.
உண்மை மற்றும் பொய் உண்மை மற்றும் செயற்கை ஆகியவற்றிற்கு இடையிலான வேறுபாடு மங்கலாகி தகவல் அறியும் உரிமையை பாதிக்கின்றது என எல்லைகள் அற்ற நிருபர்கள் அமைப்பின் அறிக்கை தெரிவித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு ஊடக உலகின் மீது மேலும் கடும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது என எல்லைகள் அற்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
–
இதேவேளை அரசாங்கங்கள் பிரச்சார போரில் ஈடுபட்டுள்ளன.
கடந்த வருடம் உக்ரைன் மீதான படையெடுப்பின் பின்னர் பத்திரிகை சுதந்திர பட்டியலில் வீழ்ச்சியடைந்த நிலையில் காணப்பட்ட ரஸ்யா பட்டியலில் மேலும் பின்னோக்கி சென்றுள்ளது.
அரச ஊடகங்கள் கிரெம்ளினிற்கு அடிமைகள் போல ஆதரவளிக்கும் அதேவேளை புட்டின் நிர்வாகத்தை விமர்சிக்கும் ஊடகங்கள் வெளிநாடுகளில் இருந்து செயற்படவேண்டிய நிலையேற்பட்டுள்ளது.
கடந்தமாதம் கிரெம்ளின் வோல்ஸ்ரீட் செய்தியாளரை கைதுசெய்தது – பனிப்போரின் பின்னர் வேவு நடவடிக்கைகளிற்காக அமெரிக்க செய்தியாளர் ரஸ்யாவில் ஒருவர் கைதுசெய்யட்டமை இதுவே முதல் தடவை.
இதேவேளை தஜிக்கிஸ்தான் இந்தியா துருக்கி ஆகியநாடுகள் பத்திரிகை சுதந்திர பட்டியலில் பிரச்சினைக்குரிய வகையில் சுதந்திரம் குறைவாக காணப்படும் பட்டியலில் காணப்படுகின்றன.
குறிப்பாக இந்தியா கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 11 இடங்கள் பின்னோக்கி சென்று 161 வது இடத்தில் இந்தியா காணப்படுகின்றது.
பிரதமர் நரேந்திரமோடிக்கு நெருக்கமான கோடீஸ்வரர்கள் ஊடகங்களை கைப்பற்றிய பின்னர் இது இடம்பெற்றுள்ளது.
இந்திய ஊடகங்கள் முற்போக்கானவை என கருதப்பட்ட காலமிருந்தது எனினும் இந்துதேசிய பிரதமர் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் அந்த நிலை வேகமாக மாற்றமடைந்தது.
2022 இல் பத்திரிகை சுதந்திரம் ஆபிரிக்காவிலேயே மிகமோசமான வீழ்;ச்சியை சந்தித்துள்ளது.
இதுவரை பிராந்தியத்திற்கு உதாரணமாக காணப்பட்ட செனெகல் பட்டியலில் 31 இடங்கள் பின்னோக்கி நகர்ந்துள்ளது – இரண்டு பத்திரிகையாளர்களிற்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளே இதற்கு காரணம்.
ஜனாதிபதி கையிஸ் சயீட்டின் ஏதோச்சதிகார போக்கு காரணமாக துனிசியாவும் பட்டியலில் பின்னோக்கிநகர்ந்துள்ளது.
ஒலிவர் ஹோம்ஸ் ( கார்டியன்)
ரஜீபன்