மின் கட்டணங்கள் மீளாய்வு செய்யப்படும்

172 0

அரசாங்கத்தின் கொள்கைக்கமையவும் , ஏற்கனவே அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமையவும் வருடத்தில் இரு சந்தர்ப்பங்களில் மின் கட்டணங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.

அதற்கமைய எதிர்வரும் ஜூலைக்குள் மீளாய்வு செய்யப்பட்டு மீண்டும் மின் கட்டணங்கள் திருத்தப்படும் என்று மின் சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். அவரின் டுவிட்டர் பதிவில் , ‘எதிர்வரும் ஜூலை மாதத்தில் மின்சார உற்பத்தி செலவுகள் மீளாய்வு செய்யப்பட்டு மின் கட்டணங்கள் திருத்தப்படும்.

கடந்த 2022இல் எடுக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை ரீதியான தீர்மானத்துக்கமையவும் , அமைச்சரவை அங்கீகாரத்துக்கமையவும் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மற்றும் ஜூலையில் மின் கட்டணங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதே வேளை மின்சாரசபை மறுசீரமைப்புக்களுக்கமைய புதிய விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். குறித்த விலை சூத்திரம் 20 ஆண்டுகளுக்கொருமுறை மாறக் கூடியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் வலு சக்தி துறையில் சீர் திருத்தங்கள் , நிலையான அபிவிருத்தி இலக்குகள் குறித்து ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி அசுசா குபோடா மற்றும் அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கிடையில் விசேட சந்திப்பொன்றும் இடம்பெற்றுள்ளது.

அரசின் கொள்கை, முன்மொழியப்பட்ட விலை சூத்திரம், மறுசீரமைப்பு கொள்கைகள் , கடன்கள் , மானியங்கள், மின்சார வாகனங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.