பிராந்திய பாதுகாப்புக்கான ஒத்துழைப்பு தொடர்பில் இலங்கை – இந்தியா இரு தரப்பு அவதானம்

141 0

இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையிலான பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்புக்கள் தொடர்பில் இருதரப்பு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய விமானப்படைத் தளபதி எயா சீப் மார்ஷல் வி.ஆர்.சௌத்ரி மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு செவ்வாய்க்கிழமை கொழும்பில் உள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்தியா, இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்பு மற்றும் உதவிக்கு இதன் போது நன்றி தெரிவித்த இராஜாங்க அமைச்சர், பரஸ்பர நன்மை மற்றும் பிராந்திய பாதுகாப்பிற்காக நெருக்கமாக பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எயார் சீப் மார்ஷல் வி.ஆர்.சௌத்ரி, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர வேண்டும் என்றும் இந்த விடயத்தில் தனது ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் விகாஸ் சூத் கலந்துகொண்டார்.