அரசியல் சூழ்ச்சிகளால் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த போவதில்லை

129 0

அரசியல் சூழ்ச்சிகளால் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த போவதில்லை.தேர்தல் ஊடாகவே ஆட்சியமைப்போம்.பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண ஜனாதிபதி , அரசாங்கம் எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் புதன்கிழமை (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு மக்களாணை உண்டு என்பதை மே தின கூட்டத்தில் உறுதிப்படுத்தினோம்.கட்சி என்ற ரீதியில் பலமாக உள்ளோம்.எதிர்வரும் நாட்களில் கட்சியின் புதிய தவிசாளர் தலைமையில் முக்கிய தீர்மானங்கள் பல எடுக்கப்படும்.

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ தலைமையில் கட்சி மறுசீரமைப்புக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளன.

பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படுத்த போவதாக எதிர்க்கட்சியினர் குறிப்பிடுகிறார்கள்.பிரதமர் தினேஷ் குணவர்தன பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்.கட்சியின் பெரும்பான்மை ஆதரவு,பாராளுமன்ற நெறிமுறைகள் ஆகியவற்றுக்கு அமைய பிரதமராக நியமிக்கப்பட்டார்.

அரசியல் சூழ்ச்சிகளினால் பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படுத்தி ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை ஏதும் கிடையாது.ஜனாதிபதி,பிரதமர் ஆகியோர் சிறந்த முறையில் செயற்படுகிறார்கள்.பொருளாதார மீட்சிக்காக ஜனாதிபதி எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.