இலங்கை மின்சார சபையை 14 நிறுவனங்களுக்கு பொறுப்பாக்க உத்தேசம்

154 0

உத்தேச மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலத்தில் மின்சார சபை சட்டங்களை இரத்து செய்து மின்சார சபையின் வளங்கள்,பொறுப்புகள் மற்றும் உரிமைகளை 14 நிறுவனங்களுக்கு பொறுப்பாக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலம் சட்டமாக்கப்பட்டால் பாரிய நெருக்கடிகளை மின்சார சபை ஊழியர்கள் எதிர்கொள்ள நேரிடும் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (02)இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்தரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

1967 ஆம் ஆண்டு மின்சார சட்டம் மற்றும் 2009 ஆம் ஆண்டு மின்சார சட்ட திருத்தம் ஆகியவற்றை இரத்து செய்து மின்கட்டமைப்பு தொடர்பில் புதிய சட்டத்தை உருவாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இலங்கை மின்சார சபையை 14 பிரிவுகளாக வகைப்படுத்தி  2007 ஆம் ஆண்டு 07 ஆம் இலக்க கம்பனி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு மின்சார சபையின் சொத்துக்கள்,பொறுப்புக்கள் மற்றும் உரிமங்களை பொறுப்பாக்க் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

உத்தேச மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் மகாவலி மின்சார சபை,உமா ஓயா உட்பட சகல நீர்மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் நுரைச்சோலை அனல் மின்நிலையம் உள்ளிட்ட  மின்நிலையங்களை 14 கட்டங்களாக வகைப்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்காக  மின்சாரத்துறை அமைச்சரால் நியமிக்கப்பட்ட குழுவினர் தங்களின் விடயதானங்களுக்கு அப்பாற்பட்ட வகையில் ஒருசில பரிந்துரைகளை முன்வைத்துள்ளார்கள்.

எழுவர் அடங்கிய இந்த குழுவினர் இலங்கை மின்சார சபையை முழுமையாக இரத்து செய்து அதன் வளங்களை 14 நிறுவனங்களுக்கு பொறுப்பாக்க பரிந்துரைத்துள்ளனர். இதற்காக இவர்கள் மின்கட்டமைப்பு தொடர்பில் புதிய சட்டதிருத்தங்களையும் முன்வைத்துள்ளார்கள்.

மின்சார சபையை மறுசீரமைப்பதை காட்டிலும் மின்சார சபையை தனியார் மயப்படுத்தும் அரசியல் நோக்கத்தை அடிப்படையாக கொண்டதாக குழுவினர் பரிந்துரைகளை முன்வைத்துள்ளார்கள்.

மின்சார சபையை முழுமையாக இரத்து செய்து அதன் வளங்களை 14 கட்டங்களாக வேறுப்படுத்துவது பரிந்துரைகளில் பிரதானவையாக காணப்படுகிறது. இதற்கமைய சகல மகாவலி மின்நிலையங்களையும் ஒரு நிறுவனத்துக்கும்,லக்ஷபான மின்நிலையங்களை பிறிதொரு நிறுவனங்களுக்கும் வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மின்சார சபையின் வளங்கள் மற்றும் பொறுப்புக்கள்,உரிமைகளை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் போது மின்னுற்பத்தி கட்டமைப்பில் பாரிய நெருக்கடி தோற்றம் பெறும் அத்துடன் மின்சார சபை ஊழியர்களின் தொழில் உரிமைகளுக்கு பாதிக்பு ஏற்படும்.குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்தினால் பாரிய நெருக்கடிகள் தோற்றம் பெறும்.

உத்தேச மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலத்தில் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவை இரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின் ஊடாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு சுயாதீன ஆணைக்குழுவாக இயற்றப்பட்டது. அரசியலமைப்பு பேரவையின் ஊடாகவே ஆணைக்குழுவுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டார்கள்.

மின்சாரத்துறை அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உத்தேச மின்சார சபை மறுசீரமைப்பு சட்;டமூலத்தில் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோரை நியமிக்கும் அதிகாரம் மின்சாரத்துறை அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அரசியல்வாதியான அமைச்சர் சுயாதீன ஆணைக்குழுவுக்கு எப்படி தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க முடியும்.குழுவின் செயற்பாடு நகைப்புக்குரியதாக உள்ளது.

சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தின் பல விடயங்களை எதிர்வரும் நாட்களில் பகிரங்கப்படுத்துவோம்.இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு தனியார் மயப்படுத்த முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார்.