‘பாகிஸ்தானின் கிம் கர்தாஷியன்’ என்று புகழப்பட்டவர், கன்டீல் பலோச் (வயது 26). இப்பெண், சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர். அந்த புகழை வைத்து, மாடலிங்கும் செய்து வந்தார். இவரது கவர்ச்சியான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அதே சமயத்தில், அவர் கலாசாரத்தை இழிவுபடுத்துவதாக பழமைவாதிகள் குற்றம் சாட்டி வந்தனர்.
அவற்றை எல்லாம் பொருட்படுத்தாத பலோச், பிரபல மத குரு முப்தி அப்துல் கவியுடன் ‘செல்பி’ படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். மத குருவின் மடியில் அவர் அமர்ந்திருப்பது போன்ற வீடியோவும் வெளியானது. இதனால் எழுந்த எதிர்ப்பு காரணமாக, பிரபலமான முஸ்லிம் கவுன்சிலில் இருந்து அப்துல் கவி நீக்கப்பட்டார்.
‘செல்பி’ விவகாரத்தால், மாடல் அழகி பலோச்சுக்கும் கொலை மிரட்டல்கள் வந்தன. அவர் தனக்கு பாதுகாப்பு அளிக்குமாறு பாகிஸ்தான் உள்துறை அமைச்சகத்துக்கு வேண்டுகோள் விடுத்தார். ஆனால், பாதுகாப்பு அளிக்கப்படவில்லை. இதற்கிடையே, கடந்த வெள்ளிக்கிழமை, மாடல் அழகி பலோச் கொலை செய்யப்பட்டார். அவரது கொலை, பாகிஸ்தான் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அவருடைய 2 சகோதரர்கள் மீது அவருடைய தந்தை போலீசில் புகார் கொடுத்தார். குடும்ப கவுரவத்தை குழிதோண்டி புதைத்ததால், விஷம் கொடுத்து, கழுத்தை நெரித்து பலோச்சை கொன்று விட்டதாக அவருடைய சகோதரர் முகமது வசீம் ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில், இந்த கொலையில் மத குரு அப்துல் கவியின் பங்கு குறித்தும் விசாரணை நடத்தி வருவதாக முல்தான் நகர காவல்துறை தலைவர் அசார் இக்ரம் தெரிவித்தார்.ஆனால், பலோச் கொலையில் தனக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்று அப்துல் கவி மறுப்பு தெரிவித்துள்ளார். போலீசார் அழைத்தால், விசாரணைக்கு ஆஜராவேன் என்றும் அவர் கூறினார்.பலோச்சின் மற்றொரு சகோதரரான இளநிலை ராணுவ அதிகாரி முகமது அஸ்லமின் தொடர்பு குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.