உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடவிருந்த அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பம்

132 0

2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடவிருந்த அரச ஊழியர்களை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்வது தொடர்பில் பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது தொகுதிக்கு வெளியே வேறு பகுதியில் தற்காலிகமாக பணிகளை ஆரம்பிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

அதன்படி, அவர்களுக்கு உரிய சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரச ஊழியர்களுக்கும் இது தொடர்பில் அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை பிரதமர் சமர்ப்பித்துள்ளார்.

இதன்படி அரச ஊழியர்களை அவர்கள் தொழில்புரிந்த பகுதிக்கு வெளியே மற்றும் அருகிலுள்ள இடத்திற்கு மீள நியமிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு தேவையான அறிவுறுத்தல்கள் மாகாண ஆளுநர்கள் ஊடாக அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர குறிப்பிட்டுள்ளார்.