மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கைத்துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று புதன்கிழமை (03) இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு வீதி ரோந்து கடமைக்காக கைத்துப்பாக்கி வழங்கப்பட்டிருந்தது.
அவர் சம்பவதினமான இன்று புதன்கிழமை அதிகாலை 3 மணிக்கு கடமையை முடித்துக்கொண்டு அந்த கைத்துப்பாக்கியை ஆயுத களஞ்சி பொறுப்பாளரிடம் வழங்க முற்பட்டபோது தவறுதலாக கைத்துப்பாக்கி வெடித்தது.
இதன்போது, களஞ்சி பொறுப்பாளரான பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் காலில் துப்பாக்கி வெடித்து சூடு ஏற்பட்டதையடுத்து, படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸ் உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.