நானுஓயாவில் காலாவதியான 200 கிலோ கோதுமை மா மீட்பு

88 0
image

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா எடின்பரோ தோட்டத்தில் தோட்டத் தொழிலாளிகளுக்கு வழங்குவதற்கு வைத்திருந்ததாக கூறப்படும் காலாவதியான 200 கிலோ எடையுள்ள  கோதுமை மா நானுஓயா சுகாதார பரிசோதகர்களால் மீட்கப்பட்டுள்ளது.

தோட்ட தொழிலாளர்களுக்கு கிடைத்த தகவலின் படி அனைத்து எடின்பரோ தொழிலாளர்களும் ஒன்றிணைந்து தேயிலை தோட்டத்தொழிற்சாலையின் நுழைவாயிலுக்கு அருகே இருந்து தோட்ட நிர்வாக அதிகாரிகளிடம் முரண்பட்டுக் கொண்டிருந்தன.

இதனை அடுத்து நானுஓயா பொலிஸாருக்கும், நானுஓயா சுகாதார பரிசோதருக்கும் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே தோட்டத்தின் களஞ்சியசாலையிலிருந்து 200 கிலோகிராம் கோதுமை மா மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் குறித்த தோட்ட முகாமையாளர் குறிப்பிடுகையில் காலாவதியான கோதுமை மா இருந்தமை உண்மைதான் ஆனால் அவை தோட்டத் தொழிலாளர்களுக்கு விநியோகம் செய்யவில்லை, தொழிற்சாலையின் களஞ்சியசாலையில் காலாவதியான பொருட்கள் வைத்திருந்த இடத்திலேயே இந்த நான்கு மூட்டைகள் அடங்கிய 200 கிலோ கோதுமை மாவினை வைத்திருந்தோம், தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதம் ஒருமுறை வழங்கும் கோதுமை மா சுத்தமான ஒதுக்குப்புறமான களஞ்சியசாலையில் புதிய விளம்பர அறிவித்தல்கள் ஒட்டப்பட்டும், காலாவதியாகும் திகதிகள் பொறிக்கப்பட்டும் தனியான அறையில் வைத்திருக்கின்றோம் எனத்தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து தேயிலை தோட்டத்தொழிற்சாலையின் நுழைவாயிலுக்கு அருகில் இருந்து தொழிலாளர்களை  கலைந்து செல்லுமாறு பொலிஸார் அறிவித்ததையடுத்து தொழிலாளர்கள் அதற்கு இணங்கி கலைந்து சென்றனர்.

இதன்போது தோட்ட நிர்வாக அதிகாரிகளிடம் மேற்கொண்ட  விசாரணைகளில் காலாவதியான கோதுமை மா வைத்திருந்து தெரியவந்தது.

அத்தோடு வழமைக்கு மாறாக கோதுமை மாவில் துர்நாற்றம் வீசுவதாகவும், காலாவதியான 200 கிலோ கோதுமை மா கைப்பற்றி கோதுமை மா வைத்திருந்த களஞ்சியசாலையும் முற்றுகை இடப்பட்டு இது குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட பின் உரிய  நடவடிக்கைகள் எடுக்க இருப்பதாக நானுஓயா சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.