இரண்டு கஜமுத்துகளை கடத்திய இருவர் கைது – அம்பாறையில் சம்பவம்

88 0

இரண்டு கஜமுத்துகளை கடத்திச் சென்ற இருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்து  பொத்துவில்  தலைமையக பொலிஸார் ஒப்படைத்துள்ளனர்.

கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய அம்பாறை  மாவட்டம் பொத்துவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  அல் ஹலாம் வீதி  பகுதியில்  செவ்வாய்க்கிழமை (2) மாலை முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே விசேட அதிரடிப்படையினர்  குறித்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

இச்சோதனை நடவடிக்கையின் போது கல்முனை விசேட அதிரடிப்படைக்கு உதவியாக அறுகம்பை முகாம் விசேட அதிரடிப்படையினரும் களமிறங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த  நடவடிக்கையின் போது  2 கஜமுத்துகளை கடத்திவந்த 60 ,37 வயதுடைய  இரு சந்தேக நபர்களை  மாறுவேடத்தில் சென்ற விசேட அதிரடிப்படை அணி  கைது செய்ததுடன்  கஜமுத்துக்கள்  மற்றும் இதர சான்று பொருட்களை  பொத்துவில் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்நடவடிக்கையானது விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக்கட்டளை பதில் அதிகாரி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.டி.டி நெத்தசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய அம்பாறை மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.சி வேவிடவிதான ஆகியோரின் வழிகாட்டலில் கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்க மேற்பார்வையில் பொலிஸ் பரிசோதகர் எஸ்.எம்.பி.பி.எம் டயஸ் தலைமையிலான  அதிகாரிகள் மற்றும் புலனாய்வு பிரிவினர் இணைந்தே இந்நடவடிக்கையை முன்னெடுத்து சந்தேக நபரை கைது செய்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை  விசேட அதிரடிப்படையினர்  மேற்கொண்டு வருகின்றனர்.