டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

83 0

 நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு மற்றும் எலிக் காய்ச்சல் என்பன ஏற்படக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாக சுகாதார தரப்பு எச்சரித்துள்ளது.

எனவே இரண்டு நாட்களுக்கும் அதிகமாக காய்ச்சல் நிலைமை காணப்பட்டால் உடனடியாக வைத்தியசாலைக்குச் செல்லுமாறு கொழும்பு மாநகரசபையின் பிரதான மருத்துவ அதிகாரி வைத்தியர் ருவான் விஜயமுனி தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி வரை 28 918 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இது பாரிய அதிகரிப்பாகும்.

டெங்கு நோயால் இவ்வாண்டில் இது வரையான காலப்பகுதியில் 15 மரணங்கள் பதிவாகியுள்ளன.

நோய் இனங்காணப்படாமல் மிகவும் தாமதமாக வைத்தியசாலை செல்வதே மரணங்கள் பதிவாகக் காரணமாகும். எனவே விரைவில் வைத்தியசாலை செல்வதன் ஊடாக மரணங்களை தவிர்க்க முடியும்.

தற்போது சுமார் 12 ஆண்டுகளின் பின்னர் டெங்கு நோயை ஏற்படுத்தக் கூடிய மூன்றாம் வகை நுண்ணுயிர் பரவியுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை எதிர்கொள்ளக் கூடிய நோய் எதிர்ப்பு சக்தி எமது உடலில் இல்லை. எனவே உரிய நேரத்தில் சிகிச்சை பெறுவதே சிறந்த வழிமுறையாகும்.

நோய் ஏற்பட்டதன் பின்னர் சிகிச்சை பெறுவதை விட , டெங்கு பரவுவதைத் தவிர்க்கும் வகையில் சுற்றுச் சூழலை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். குறிப்பாக வீடுகள் , பாடசாலைகள் உள்ளிட்ட பொது மக்கள் மற்றும் சிறுவர்கள் வசிக்கும் இடங்களில் தூய்மையைப் பேணுவது அவசியமாகும் என வைத்தியர் ருவான் விஜேமுனி மேலும் தெரிவித்தார்.