அப்பாவி இளைஞர்களின் எதிர்காலத்தை சிதைக்கும் கருவியாக போதைப் பொருள் உள்ளது: சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி கருத்து

119 0

அப்பாவி இளைஞர்களின் எதிர்கால வாழ்வை சிதைக்கும் கருவியாக போதைப் பொருள் உள்ளது என சென்னை போதைப்பொருள் கடத்தல் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். மேலும் கஞ்சா கடத்தல் வழக்கில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த 3 பேருக்கு தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

காரனோடை சுங்கச்சாவடி: மகாராஷ்டிராவிலிருந்து தமிழகத்துக்கு கிலோ கணக்கில் கஞ்சா கடத்தி கொண்டு வரப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் திருவள்ளூர் மாவட்ட போதைப் பொருள் கடத்தல் தடுப்புபிரிவு போலீஸார் கடந்த 2018 ஆகஸ்ட் மாதம் காரனோடை சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியே வந்தமும்பை பதிவெண் கொண்ட 2 கார்களை சோதனையிட்டபோது அதில் 221 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதையடுத்து அந்த காரில் இருந்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஷேக் அன்சார், ஷேக் அகமது, சுஷீல் தாக்கர் ஆகியோரை கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெ. ஜூலியட் புஷ்பா, குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கும் தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ. 2.40 லட்சம் அபராதம் விதி்த்தார்.

மேலும் நீதிபதி தனது தீர்ப்பில் அப்பாவி இளைஞர்களின் எதிர்கால வாழ்வை சிதைக்கும் கருவியாக போதைப்பொருள் உள்ளது. இதை அடியோடு வேரறுக்க வேண்டும். இதனால் சமூகமும் பெருத்த பாதிப்பை சந்தித்து வருகிறது என வேதனை தெரிவித்துள்ளார்.