செங்குன்றம் அருகே தீ விபத்து நடந்த ரசாயன கிடங்கில் இருந்து வெளியேறிய நச்சு புகையால் பொதுமக்கள் கண் எரிச்சல் மற்றும் மூச்சுத் திணறலால் அவதியுற்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே உள்ள பாயாசம்பாக்கம் பகுதியில் தனியார் ரசாயன கிடங்கு உள்ளது. பிளீச்சிங் பவுடர் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள், காஸ்டிக் சோடா உள்ளிட்ட ரசாயன பொருட்கள் வைக்கப்பட்டிருந்த இந்த கிடங்கில் கடந்த மாதம் 27-ம் தேதி நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, 4 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்டநேரம் போராடி தீயை அணைத்தனர். அத்துடன் ரசாயன பொருட்களும் மண்ணில் புதைக்கப்பட்டன.
இந்நிலையில், நேற்று அதிகாலை முதல், இந்த ரசாயன கிடங்கிலிருந்து வெள்ளை நிற நச்சுப் புகை வெளியேறிய வண்ணம் இருந்தது. தீ விபத்தில் சேதமடைந்த ரசாயன பொருட்களை ஆழமாக பள்ளம் தோண்டி புதைக்காமல், மேலோட்டமாக மண்ணில் புதைக்கப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையினால் ரசாயன பொருட்களில் தண்ணீர் கலந்து வெள்ளை நிற நச்சுப் புகை வெளியேறியதாக கூறப்படுகிறது.
இந்த நச்சுப்புகையால் பாயாசம்பாக்கம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வசிப்பவர்கள் கண் எரிச்சல், மூச்சுத் திணறல் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்த செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள் மற்றும் செங்குன்றம் போலீஸார், வருவாய்த் துறை அதிகாரிகள் சம்பவ இடம் விரைந்து, ரசாயன பொருட்களின் மீது பொக்லைன் இயந்திரம் மூலம் மண் அள்ளி கொட்டி மூடும் பணியில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக நேற்று மதியம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, அவர் ரசாயன பொருட்களை பாதுகாப்பாக மூட உரிய அறிவுறுத்தல்களை வழங்கினார். அந்த அறிவுறுத்தலின்படி, ரசாயன பொருட்களை பாதுகாப்பாக மூடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்பணி நீண்ட நேரம் நீடித்தது.