சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் சுரங்கம் தோண்டும் 17 இயந்திரம் ஜூலைக்குள் தயார்

92 0

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில்திட்டத்தில் சுரங்கம் துளையிடும் பணியில் மொத்தம் 23 இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதில் தலா ரூ.80கோடி என 19 இயந்திரங்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஜூலைக்குள் 17 இயந்திரங்கள் தயாராகிவிடும் என்று மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பில்118.9 கி.மீ. தூரத்துக்கு செயல்படுத்தப்படுகிறது. மாதவரம்–சிறுசேரி சிப்காட், கலங்கரை விளக்கம்–பூந்தமல்லி, மாதவரம்–சோழிங்கநல்லூர் ஆகிய 3 வழித்தடங்களில் மொத்தம் 128 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

இதில்மொத்தம் 42.6 கி.மீ. தூரத்துக்கு சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. பணிகளை 2026-ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது, 40-க்கும் மேற்பட்ட இடங்களில் உயர்மட்டப் பாதை, சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. குறிப்பாக, 3-வது வழித்தடத்தில் மாதவரம் பால் பண்ணை அருகே சுரங்கம் தோண்டும் பணி கடந்த ஆண்டு அக்.13-ம் தேதி தொடங்கியது.

மாதவரம் பால் பண்ணை முதல் மாதவரம் நெடுஞ்சாலை வரை சுரங்கம் தோண்டும் பணியில் 2 இயந்திரங்கள் ஈடுபட்டுள்ளன. இதில் முதலாவது இயந்திரம் ‘நீலகிரி’, மொத்த நீளம் 1,400 மீட்டரில் 710 மீட்டர் நீளத்தையும், 2-வது இயந்திரம் ‘பொதிகை’, மொத்த நீளம் 1,400 மீட்டரில் 260 மீட்டர் நீளத்தையும் கடந்துள்ளன.

மாதவரம் பால் பண்ணையில் இருந்துவேணுகோபால் நகர் மெட்ரோ வரையிலான சுரங்கம் தோண்டும் 3-வது இயந்திரம் ‘ஆனைமலை’, மொத்த நீளம் 400 மீட்டரில் 110 மீட்டர் நீளத்தை கடந்துள்ளது. இங்கு சுரங்கம் தோண்ட 4-வது இயந்திரமும் பயன்படுத்தப்பட உள்ளது.

இதே வழித்தடத்தில் பசுமை வழிச்சாலை பகுதியில் 1.226 கி.மீ. தொலைவுக்கு சுரங்கம் தோண்டும் பணி கடந்தபிப்.16-ம் தேதி தொடங்கியது. இதில் முதல் இயந்திரமான ‘காவேரி’, டிபி சாலைக்கு கீழே சுரங்கப்பாதை அமைத்து,திருவிக பாலம் அருகே அடையாறு ஆற்றை கடந்து அடையாறு சந்திப்புநிலையத்துக்கு ஆகஸ்டில் சென்றடையும். இந்த இயந்திரம் இதுவரை60 மீட்டரை கடந்துள்ளது. இங்கு பயன்படுத்தப்படும் 2-வது இயந்திரத்துக்கு ‘அடையாறு’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

கெல்லிஸ்–தரமணி இடையே சுரங்கம் தோண்ட 8 இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இவை ஜெர்மனியின் ஹெர்ரென்க்னெக்ட் நிறுவன தயாரிப்பாகும்.

இந்த வழித்தடத்தில் சேத்துப்பட்டு–ஸ்டெர்லிங் சாலை இடையே சுரங்கம் தோண்டும் பணியில் ‘சிறுவாணி’, ‘பாலாறு’என்ற 2 இயந்திரங்களும், அயனாவரம்–பெரம்பூர் மற்றும் ஓட்டேரி வரை 3 இயந்திரங்களும் பயன்படுத்தப்பட உள்ளன. 3-வது வழித்தடத்தில் பயன்படுத்தப்பட உள்ள 15 இயந்திரங்களில், 13 இயந்திரங்கள் வந்துவிட்டன. மற்ற 2 இயந்திரங்களும் விரைவில் தயாராகிவிடும்.

கலங்கரை விளக்கம்–பூந்தமல்லி 4-வது வழித்தடத்தில் சுரங்கம் தோண்ட 4 இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.இரண்டு இயந்திரங்கள் ஜூலைக்குள் கலங்கரை விளக்கத்தில் அணிவகுத்து நிற்கும். வரும் ஜூலைக்குள் 17 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பணி நடைபெறும் இடத்தில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியபோது, ‘‘2-ம்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் சுரங்கம் துளையிடும் பணியில் மொத்தம் 23 இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதில் 19 இயந்திரங்கள் வாங்க ஒப்பந்தம்செய்யப்பட்டுள்ளது. ஒரு இயந்திரத்துக்கு சுமார் ரூ.80 கோடி செலவிடப்படுகிறது.

ஜூலைக்குள் 17 இயந்திரங்கள் வந்துவிடும். 4-வது வழித்தடத்தில், 4 இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. 2 இயந்திரங்கள் ஜூலையிலும், மீதம் இரண்டுஇயந்திரங்கள் இந்தாண்டு இறுதியிலும் தயாராகிவிடும். 5-வது வழித்தடத்தில் 5.8 கி.மீ. தூர சுரங்கப் பணிக்காக 4 இயந்திரங்கள் வாங்கப்பட உள்ளன. இதற்கு 2 மாதத்தில் ஒப்பந்தப்புள்ளி கோரப்படும்’’ என்றனர்.