ஹைட்ரோ கார்பன் திட்டம் அமல்படுத்தப்பட்டால் இங்குள்ள பசுமையான சோலைகள், பாலைவனமாக மாறிவிடும் என வேதனைப்படுகின்றனர் விவசாயிகள்.
புதுக்கோட்டை மாவட்டம் என்றாலே வழியெங்கும் தரிசு நிலங்கள், நீரில்லா குளங்கள், பாறைகளால் ஆன மலைகள் என வறட்சிக்கான அடையாளங்களே பெரும்பாலும் நினைவுக்கு வரும்.
ஆனால் அதற்கு நேர்மாறாக இருக்கிறது நெடுவாசல் பகுதி கிராமங்கள். இங்குள்ள சாலைகளின் வழிநெடுகிலும் பலா, தென்னை, தேக்கு மரங்கள், கரும்பு, கடலை, வாழை, நெல், உளுந்து உள்ளிட்ட பணப்பயிர்கள் காட்சியளிக்கின்றன.இவை தவிர ஆங்காங்கே மல்லிகை, சாமந்தி, வாடாமல்லி, செம்பருத்தி உள்ளிட்ட மலர்ச்செடிகளும் பயிரிடப்பட்டுள்ளன.
நெடுவாசல் மட்டுமின்றி வாணக்கன்காடு, கருக்காக்குறிச்சி, கோட்டைக்காடு மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களிலும் பசுமைக்குப் பஞ்சமில்லை. ஆற்று நீருக்கு வழியில்லை என்றாலும், ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து மோட்டார் மூலம் நீர் பாய்ச்சி ஆண்டுதோறும் முப்போகம் சாகுபடி செய்கின்றனர் இங்குள்ள விவசாயிகள்.
ஓங்கி வளர்ந்த மரங்களை கொண்ட தோட்டம், அதற்கு நடுவில் வீடு என முற்றிலும் பசுமை சூழ்ந்த வாழ்க்கையைக் கொண்டுள்ள இந்த கிராமங்களில் தான் தற்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதற்கு எதிரான போராட்டங்கள் அங்கு வலுப்பெற்றுள்ள நிலையில் அதற்கு ஆதரவு தெரிவிக்க நேரில் வந்த அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பலர் நெடுவாசல் பகுதி கிராமங்களின் அழகையும், பசுமையையும் வியந்து பாராட்டி சென்றுள்ளனர்.
இந்தச் சூழலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் அமல்படுத்தப்பட்டால் இங்குள்ள பசுமையான சோலைகள், பாலைவனமாக மாறிவிடும் என வேதனைப்படுகின்றனர் விவசாயிகள்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-
இன்று, நேற்றல்ல பல தலைமுறையின் உழைப்பால் உருவான பசுமை இது. நெல், கரும்பு, வாழை என குறுகிய காலத்தில் அறுவடை செய்யப்படும் பயிர்களை மட்டும் சாகுபடி செய்யாமல் பலா, தென்னை, தேக்கு, மா, பப்பாளி என பல்வேறு வகையான மரங்களையும், அதிகளவில் நட்டு வளர்ப்பதே, இந்த பசுமைக்கு முக்கிய காரணம்.
வயல்களில் மட்டுமின்றி வீட்டுக்கு வீடு மரங்களை அதிகளவில் நட்டு பராமரிக்கின்றனர். இங்கு ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டால் நீர் வளம் அழிந்து நிலங்கள் வறண்டு, பசுமைப்பகுதிகள் பாலைவனமாகி விடும்.
வறட்சியான இந்த மாவட்டத்தில் ஆலங்குடியில் இருந்து ரகுநாதபுரம் வரையிலான பகுதிகள் செழிப்புடன் காணப்படும். இந்த பசுமைக்கு விவசாயிகளின் கடும் உழைப்பும், அதற்கு ஒத்துழைக்கும் செம்மண் பூமியும் முக்கிய காரணம்.
இந்த மண்ணில் நெல், கடலை, உளுந்து மட்டுமல்ல வெள்ளரி, மிளகு, சோளம், தர்பூசணி என அனைத்து வகையான பயிர்களும் அமோகமாக விளைகின்றன. அப்படிப்பட்ட இந்த மண்ணை அழிக்கும் வகையில் கொண்டு வரப்படும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றனர்.
ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த புதுக்கோட்டையைச்சேர்ந்த வங்கி ஊழியர் ஒருவர் கூறும் போது, புதுக்கோட்டையில் பிறந்து வளர்ந்த எனக்கு இத்தனை ஆண்டுகளாக அருகிலேயே இப்படியொரு செழிப்பான பகுதி இருக்கும் விவரம் தெரியவில்லை. முதன் முறையாக இங்கு வந்துள்ளேன். பார்த்தவுடன் வியந்து விட்டேன். கேரளா, கன்னியாகுமரி போன்ற பகுதிகளில் இருப்பது போன்ற பசுமையை இங்கு காண முடிகிறது என்றார்.