சூடானில் போரில் ஈடுபட்டுள்ள இரு ஜெனரல்களும் 7 நாட்கள் போர்நிறுத்தத்தை கடைபிடிப்பதற்கு இணங்கியுள்ளனர் என அயல் நாடான தென் சூடானின் அரசாங்கம் அறிவித்துள்ளது.
சூடானை எவ்வாறு நிர்வகிப்பது என்பது தொடர்பாக, இராணுவத் தளபதி ஜெனரல் ஃபத்தா அல் புர்ஹானுக்கும் ஆர்.எஸ்.எவ். எனும் துணை இராணுவப் படையின் தளபதி ஜெனரல் மொஹம்மத் ஹம்தான் தகலோவுக்கும் இடையிலான முரண்பாடுகள் காரணமாக கடும் மோதல்கள் நடந்தன,
இந்நிலையில், இவ்விரு ஜெனரல்களும் மே 4 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதிவரை 7 நாட்கள் போர் நிறுத்தத்துக்கு இணங்கியுள்ளனர் என தென் சூடான் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
நேற்றுமுன்தினம் 3 ஆவது தடவையாக 72 மணித்தியால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. அப்போர் நிறுத்தம் இன்று முடிவுக்கு வரும் நிலையில், நாளை முதல் 7 நாட்கள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சூடானில் கடந்த 15 ஆம் திகதி முதல் நடைபெற்ற மோதல்களால் 500 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சுமார் ஒரு இலட்சம் பேர் சூடானிலிருந்து வெளியேறியுள்ளனர் எனவும், 334,000 பேர் உள்ளக ரீதியாக இடம்பெயர்ந்துள்ளனர் எனவும் ஐநா தெரிவித்துள்ளது.