திட்டமிடப்படாத நிதி முகாமைத்துவத்தால் புதிய வரிகளை மக்களுக்கு விதிக்கும் மஸ்கெலியா பிரதேச சபை

142 0

மஸ்கெலியா பிரதேச சபையானது கடந்த 2022 ஆம் வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தை அரச மானியத்தை முழுமையாக நம்பி உருவாக்கியுள்ளதை வரவு செலவு திட்டத்தில் காணமுடிகின்றுத இந்த தொகை அமைச்சுகளிலிருந்து கிடைக்காமையால்  திட்டமிட்ட அபிவிருத்திகளை  முழுமையாக பூர்த்தி செய்ய முடியாமல் போயுள்ளதை எதிர்க்கட்சியினர் சுட்டிக்காட்டுகின்றனர்  மேலும் அதனை ஈடு செய்ய புதிய வரிகளை மக்கள் மீது சுமத்துவதாக புதிய சுற்றறிக்கை சபையால் வெளியிடப்பட்டுள்ளது.

சபையின் வருமானத்தை அதிகரிப்பதற்கான திட்டமிடல்கள் மேற்கொள்ளப்படாமையும், செலவீனங்களை கட்டுப்படுத்தி நிலைபேறான அபிவிருத்தி மற்றும் சேவைகளை பிரதேச மக்களுக்கு வழங்குவதில் இச்சபை பின்னடைந்துள்ளதையும் காட்டுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

சபையின் பிரதான செலவீனங்களான வரவு செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதன் படி   சம்பளமும், ஏனைய வேதனங்களும், பிரயாணம், உபகரண செலவு, மூலதன சொத்துக்களை பேணல், புனரமைத்தல், தொடர்பிணைப்பு, வட்டி ஊக்குவிப்பு, அரசிறை மானிய சந்தா, உதவிதொகைகள், ஓய்வூதியம், பணக்கொடை, மூலதன செலவு மற்றும் கடன் மீள செலுத்துதல் என்பன அடங்குகின்றன. இப்பாரிய செலவீனங்களை முகாமைத்துவம் செய்வதற்கான வருமான மார்க்கங்களில் மானியத் தொகையாக ரூ.50 மில்லியன் ரூபாய் எதிர்ப்பார்த்து பாதீடு உருவாக்கப்பட்டுள்ளது. இத்தொகை சபையின் பிரதான வருமானமாக கணிக்கப்பட்டே இப்பாதீடு திட்டமிடப்பட்டுள்ளது. இது மொத்த வருமானத்தில் 65 % சதவீதமாகும்.

இதனை அதற்கு முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிகையில் 2020

ஆம் ஆண்டு மானிய எதிர்ப்பார்க்கை 51% சதவீதமாகவும், 2021 ஆம் ஆண்டு 49% சதவீதமாகவும் காணப்படுகின்றது. குறித்த ஆண்டுகளில் வரிப்பணமாக தலா 10%, 11% சதவீதங்கள் மட்டுமே காணப்படும் அதேவேளை வாடகை, அனுமதிப்பத்திர கட்டணம், சேவைக்கான கட்டணம், பற்றாணைக் கட்டணம் உள்ளிட்ட வருமானங்களும் 25% சதவீதத்துக்கு குறைவாகவே இவ்வாண்டில் காணப்பட்டுள்ளன.

வரவு செலவு திட்டத்தின் அடிப்படையில் 2022 ஆம் ஆண்டு எதிர்ப்பார்க்கப்படும் மானிய வருமானமாக 65% சதவீத தொகை மொத்த வருமானத்தில் உள்ளடக்கப்பட்டு உள்ளது. மேலும் இவ்வாண்டின் வரிப்பணமாக வெறும் 5% சதவீதம் மட்டுமே காணப்படுகின்றுத. 2022 ஆம் ஆண்டு நாடு எதிர்நோக்கிய பொருளாதார நெருக்கடி நிலைமையானது உச்சம் பெற்றிருந்தது. எனவே மஸ்கெலியா சபையானது இந்த தொகையை எவ்வகையிலும் அரச மானியமாக பெற்றுக் கொள்ள முடியாத நிலைமை தோன்றியுள்ளதாக சமூக செயல்பாட்டாளரான விக்னேஸ்வரன் தெரிவிக்கின்றார்.

இந்த அரச மானிய தொகை கிடைக்காத காரணத்தால் ,2022 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் திட்டமிடப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாத நிலை தோன்றியுள்ளதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த கருத்தையே பிரதேச மக்களும் தெரிவிக்கின்றனர். கவரவில பாதை புணரைமைப்பு தொடர்பாக பலமுறை சபையின் கவனத்துக்கு கொண்டு வந்தும் அதனை பூர்த்தி செய்யவில்லை என்று முச்சக்கர வண்டி சாரதியான செல்வம் தெரிவிக்கின்றார்.

இதனை சபையின் செயலாளர் சிவராம் ராஜவீரனும்  உறுதிப்படுத்தினார்.  அதாவது பாதை அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட 50 இலட்சம் ருபாய் கிடைக்காத காரணத்தால் அந்த வேலைத்திட்டம் பூர்த்திசெய்யப்படவில்லை. அதேபோல் 10 வட்டாரங்களில் ரூபாய் 2 இலட்சம் படி திட்டமிடப்பட்ட வேலைத்திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளன. இதன் பெறுமதி 20 இலட்சம் ரூபாய்களாகும். எனவே மொத்தமாக 70 இலட்சம் ரூபாய்க்கு திட்டமிடப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளதை சபையின் செயலாளர் உறுதிப்படுத்தினார். இதட்கான பிரதான காரணம்  அரச மானியம் கிடைக்காமையாகும் என்று சபையின் செயலாளர் தெரிவிக்கின்றார்.

இதன் காரணமாக மஸ்கெலியா நகரத்தை அண்மித்த பகுதிகளில் வடிகாலமைப்பை சீர் செய்ய முடியாது போயுள்ளது. பிரதேச வாசியான மாசி கந்தையாவின் கருத்துப்படி, வரவு செலவு திட்டத்தில் திட்டமிட்டப்படி,  இந்த வடிகாலமைப்பு திருத்தப்படாத காரணத்தால் மழைக்காலங்களில்  மக்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவித்தார்.

 

2023 ஆம் ஆண்டுக்கான சம்பளம் மற்றும் வேதனங்களை வழங்குவதற்கு மட்டுமே மொத்த வருமானத்தில் 77 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதனை ஈடுசெய்ய 2023 ஆம் ஆண்டு பாதீட்டிலும் முறையான வருமான மேம்பாட்டு திட்டங்கள் முன்வைக்கப்படவில்லை என்று சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் பி.ராஜ்குமார் தெரிவிக்கின்றார்.

அவர் மேலும் கூறுகையில் தனது பிரவுன்லோ வட்டாரத்திலும் ஏனைய கிராம அலுவலர் பிரிவுகளிலும் தமது அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க போதிய நிதி ஆதாரம் இல்லாத குறைபாட்டை முன்வைக்கின்றார். குறிப்பாக மஸ்கெலியா 320A, பிரவுன்ஸ்வீக் 320M, மவுசாகலை 320I, கவரவில 320C, ஓல்டன் 320J, மறே 320U, ஸ்டெர்ஸ்பி 320D ஆகிய பிரிவுகள் பெரும்பான்மையாக மலையக மக்களை கொண்ட கிராம அலுவலர் பிரிவுகளாகும்.

எனவே இவ்வட்டாரங்களில் போதிய அபிவிருத்திகளை முன்னெடுக்க சபையின் வருமானம் போதவில்லை என்பதே இவர்களின் முக்கியமான குற்றச்சாட்டாகும். மேலம் அதிகார பிரதேசத்திற்குள் காணப்படும் சனத்தொகையில் (64947) பெரும்பான்மையான எண்ணிக்கையினர் பிரதான நகரத்துக்கு வெளியில் நிரந்தர வசிப்பிடத்தைக் கொண்டுள்ளனர். இச்சபையின் எல்லைக்குட்பட்டு பிரதான நகரமாக மஸ்கெலியா நகரமும், துணை நகரங்களாக சாமிமலை மற்றும் நல்லதண்ணீர் ஆகியன மட்டுமே காணப்படுகின்றன.

எனவே வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் சபையானது எதுவித கட்டணங்களை அறவிட்டாலும் அதனை இம்மூன்று நகரங்களில் வசிக்கும் மக்களே செலுத்த வேண்டிய நிலைமை காணப்படுகின்றது. மொத்தமாக வரிப்பணம் அறவிடும் அலகுகள் 1659 காணப்படும் அதேவேளை ஏக்கர் வரி 33 அலகுகளும், வியாபார அனுமதிப்பத்திரங்கள் 942 அலகுகளும் காணப்படுகின்றன. இதில் பெருந்தொட்டங்களில் வசிக்கும் மக்களிடம் இருந்து எவ்வித நேரடி கட்டணங்களும் சபையின் வருமானமாக வசூலிக்கப்படாத நிலையில் அரச மானிய வருமானத்தை மட்டுமே நம்பி இச்சபையின் பாதீடுகள் உருவாக்கப்பட்டுள்ளமை ஒரு முறையற்ற நிதி முகாமைத்துவமாக காணப்படுவதாக பிரதேசவாசியான சுப்பையா சுரேஸ்குமார் தெரிவிக்கின்றார்.

இது தொடர்பாக சபையின் எதிர்கட்சிகள் தொடர்ச்சியாக சபை கூட்டங்களில் வருமான அதிகரிப்பு தொடர்பாக விவாதங்களை மேற்கொண்டு வந்துள்ளன. குறிப்பாக சபையின் உறுப்பினர்களுக்கு போதுமான நிதியொதுக்கீடு இல்லை என்ற அடிப்படையிலேயே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தமது வாதங்களை முன்வைப்பதாக உறுப்பினர் ஏ.ரவீந்திரராஜா கூறுகின்றார். மேலும் சபையின் வருமானத்துக்கான மவுசாகலை படகுச்சேவை திட்டம், சிவனொளிபாதமலை யாத்திரிகர் சேவை விஸ்தரிப்பு திட்டம், காட்மோர் சுற்றுலா அபிவிருத்தி திட்டம் என்பன இன்றுவரை கணக்கிலெடுக்கப்படவில்லை என்பது உறுப்பினர் ஏ.ரவீந்திராஜாவின் ஆதங்கமாகும்.

எனவே 2022, 2023 ஆகிய வருடங்களில் இதனையும் விட குறைவான அரச மானியமே கிடைக்கப்பெறக்கூடிய நிலைமை நிலவுகின்றது. இவ்விடயங்கள் தொடர்பாக சபையின் செயலாளர் எஸ்.ராஜவீரன் அவர்களிடம் வினவியபோது குறித்த சவாலை தமது சபையானது தொடர்ச்சியாக சந்தித்து வருவதாக தெரிவித்தார். எனினும் அதனை ஈடுசெய்யும் வகையில் தமது சபையானது புதிதாக சில திட்டங்களை அறிமுகம் செய்யும் நோக்கம் இருப்பதாகவும் அதில் முதற்கட்டமாக கழிவு வரி (Garbage Tax) ஒன்றை புதிதாக அறிமுகம் செய்திருப்பதாகவம் தெரிவித்தார். இது நகரத்திலுள்ள வர்த்தக நிலையங்கள் வெளியேற்றும் கழிவின் அளவுக்கு ஏற்ப தீர்மானிக்கப்படும்.

2022.02.25 ஆம் திகதியிடப்பட்ட வர்த்தமானி மூலம் இந்த வரித்திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. முதல் 50 கிலோகிராம் மாதமொன்றுக்கு கழிவுகள் அகற்றப்படும் வர்த்தகங்களிடம் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 51 தொடக்கம் 100 வரையான கிலோகிராம் கழிவகற்றும் வர்த்தக நிறுவனங்களிடம் ரூ.300 அறவிடப்படும். அந்நிறுவனங்கள் வெளியேற்றும் கழிவு அளவுக்கேற்;ற வகையில் அத்தொகை கூடிச்செல்லும் விதத்தில் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது அரச மானியம் கிடைக்கபெறாத காரணத்தினால் முன்வைக்கப்பட்ட ஒரு மாற்றுத் திட்டமாகும். இது நகர்ப்புறங்களில் மட்டுமே வசூலிக்கப்படும்.

இந்த புதிய கழிவு வரிவிதிப்பு தொடர்பாக மஸ்கெலியா நகரின் விடுதி உரிமையாளரான எஸ். வினோதனிடம் வினவியபோது, இந்த வரியானது ஏற்கனவே விற்பனை வீழ்ச்சியடைந்துள்ள தமக்கு மேலும் ஒரு சுமையாகியுள்ளதாக தெரிவிக்கின்றார். எல்லா காலங்களிலும் ஒரே விதமான விற்பனை இடம்பெறாததால் தாம் கட்டாயமாக இந்த வரியை மாதாந்தம் செலுத்தவேண்டிய கட்டாயம் தேவை உள்ளதாகவும், பிரதேச சபையானது நகர வர்தகர்களுக்கு சலுகை திட்டங்கள் வழங்க வேண்டியது காலத்தின் அவசியமாகும் என்று விநோதன் தெரிவிக்கின்றார்.

எனவே இவ்விடயங்களை முன்னிறுத்தி மவுசாகலை மக்கள் அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் கே. விக்னேஸ்வரன் அவர்களிடம் வினவியபோது மஸ்கெலிய பிரதேச சபையானது வருமானம் ஈட்டிக்கொள்வதில் பல சிக்கல்களை முகங்கொடுப்பதாகவும், பொது மக்கள் அமைப்பு என்ற ரீதியில் தாம் தொடர்ச்சியாக பல ஆலோசனைகளையும் பாதீடு உருவாக்கத்துக்கு வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இப்பிரதேச சபையின் வரி வருமானம் நகரங்களில் மட்டுமே வசூலிக்கப்படுவதானது ஒரு சவாலாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சபையின் அதிகாரத்திற்குட்பட்டு காணப்படும் பெருந்தோட்டங்களில் இருந்து நேரடியாக எவ்வித வருமானமும் கிடைக்கப்பெறாத நிலையில் அவ்வட்டாரங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுக்கும் சம அளவிலான அபிவிருத்தி நிதியை வழங்க வேண்டியுள்ளதையும், பிரதேசத்தில் காணப்படும் சுற்றுலா மையங்களை அபிவிருத்தி செய்வதனூடாக சபைக்கு வருமானத்தை ஈட்டிக்கொள்ள முடியுமான சந்தர்ப்பங்கள் காணப்படுவதையும் அவர் வலியுறுத்தினார்.

இவ்விடயங்கள் தொடர்பாக சபையின் தவிசாளர் ஜி.செண்பகவள்ளியிடம் வினவுகையில் அவர் கூறியதாவது, “இச்சபையின் எல்லைக்குட்பட்டு எமக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான வருமான மூலங்களே உள்ளன. எனவே அவற்றை பண்படுத்தியே எமது சபைக்கான வருமானத்தை ஈட்ட வேண்டியுள்ளது. மேலும் எமது அதிகார பிரதேசத்தினுள் காணப்படும் பெருந்தொட்டங்களில் இருந்து சபைக்கு எவ்வித நேரடி வருமானங்களும் கிடைப்பதில்லை. இருப்பினும் நாம் அப்பிரதேசங்களிலும் அபிவிருத்திகளை விஸ்தரித்துள்ளோம்” என்கின்றார். மேலும் அரச மானிணம் கிடைக்கப்பெறாத சூழ்நிலையில் தமது சபையானது கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொள்வதாகவம், இதனை ஈடுசெய்ய வரி வருமானத்தை மட்டுமே அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாகவும் தவிசாளர் கூறுகின்றார்.

மஸ்கெலியா சென். ஜோன்ஸ் பாடசாலையின் முன்னாள் அதிபர் எஸ்.பி. பரமேஸ்வரனிடம் இது தொடர்பாக வினவியபோது: மஸ்கெலியா பிரதேச சபையானது வெறுமனே அரச மானியத்தை மட்டும் நம்பி தனது பாதீட்டைத் திட்டமிடுவதால் முறையாக வருமான முகாமைத்துவத்தை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மக்கள் அமைப்புக்களின் ஆலோசனைகளின் அடிப்படையில் சுற்றுலா மையங்களை அபிவிருத்தி செய்வதும், நிலைபேறான வருமான மார்க்கங்களை பிரதேச சபையானது அடையாளம் காணவேண்டியுள்ளது என்பது அவரின் கருத்தாக இருந்தது.

மேலும் சபையின் எல்லைக்குட்பட்ட பெருந்தோட்டங்களை உள்வாங்கி வருமானமீட்டவும், அபிவிருத்தி செய்யவுமான பொறிமுறை ஒன்றும் இனங்காணப்பட வேண்டும் என்பதும் அதிபரின் கருத்தாகும். இதனை அவர் பலமுறை வரவு செலவு உருவாக்க கலந்துரையாடல்களில் கலந்துகொண்டு சபைக்கு வெளிப்படுத்தியதாகவும் தெரிவித்திட்டார்.

அருள்கார்க்கி