ஜனாதிபதியை இன்று சந்திக்கிறார் வடிவேல் சுரேஷ்

85 0

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாட் சம்பளத்தை அதிகரித்தல் மற்றும் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கான சலுகைகள் அவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்தால் அவருக்கு ஆதரவளிக்க தயாராகவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

பதுளை நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஐக்கிய மக்கள் சக்தியின் மே  தினக் கூட்டத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மீதான தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் இது தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

தற்போது பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசாங்கத்தினால் பல்வேறு நிவாரணங்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் அவற்றில் பெருந்தோட்ட மக்கள் பெருமளவானோர் உள்வாங்கப்படவில்லை. மாறாக ஏற்கனவே சமூர்த்தி நலத்திட்டங்களைப் பெறுவோருக்கு மாத்திரமே அவை வழங்கப்படுகின்றன.

ஆனால் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் 1000 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் கோரிக்கைக்கு கூட இது வரையில் எந்தவொரு பதிலும் வழங்கப்படவில்லை. மக்களுக்கான நிவாரணம் குறித்து தொடர்ச்சியாக பேசும் சந்தர்ப்பங்களில் கூட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இது குறித்து அவதானம் செலுத்தியதாகத் தெரியவில்லை.

எனவே இன்று புதன்கிழமை இவ்விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியை நேரில் சந்தித்து கலந்துரையாடவுள்ளேன். அவருடனான கலந்துரையாடல் திருப்தியளித்தால் , அதாவது எனது கோரிக்கைகளுக்கு இணக்கம் தெரிவித்தால் ஜனாதிபதிக்கு நானும் ஆதரவளிப்பேன்.

இதே வேளை மலையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் சந்திப்புக்களை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச புறக்கணித்தமையால் அதிருப்திக்குள்ளாகியுள்ளேன். எனவே அவர் அதற்கு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும். எவ்வாறிருப்பினும் இன்று இடம்பெறவுள்ள ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது எனது தீர்மானத்தை அறிவிப்பேன் என்றார்.