ராஜபக்ஷர்களால் 6 இலட்சம் பேர் தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ளார்கள்

92 0

உழைக்கும் மக்களுக்கான மே தின கூட்டம் அரசியல் கூட்டமாக மாற்றமடைந்து விட்டது.தொழிலாளர்களின் உரிமை பற்றி பேசும் ராஜபக்ஷர்களினால் கடந்த ஒரு ஆண்டுக்குள் மாத்திரம் ஆறு இலட்சம் பேர் தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ளார்கள் என 43 ஆவது படையணியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

ராஜகிரிய பகுதியில் திங்கட்கிழமை (01) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

மே தின கூட்டம் அரசியல் கூட்டமாக மாற்றமடைந்து விட்டது.மே தின கூட்ட மேடைகளில் அரசியல்வாதிகள் தங்களின் எதிர்கால அரசியல் தொடர்பில் கருத்துரைக்கிறார்களே தவிர தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் தொடர்பில் எவரும் கருத்துரைக்கவில்லை.

தொழிலாளர்களின் உரிமை தொடர்பில் ராஜபக்ஷர்கள் மே தின கூட்டத்தில் கருத்துரைக்கிறார்கள்.முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உட்பட ராஜபக்ஷர்கள் பொருளாதார ரீதியில் எடுத்த தவறான தீர்மானங்களினால் கடந்த ஒரு ஆண்டு காலப்பகுதியில் மாத்திரம் சுமார் ஆறு இலட்சம் பேர் தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ளார்கள்.

நாட்டு மக்களின் தொழில் உரிமை,நிம்மதியாக வாழும் உரிமை ஆகியவற்றை இல்லாதொழித்த ராஜபக்ஷர்கள் இன்று உழைக்கும் மக்களின் உரிமை பற்றி பேசுகிறார்கள்.தங்களின் அரசியல் நோக்கத்துக்காக தொழிலாளர்களின் உரிமைகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

எரிபொருள்,எரிவாயு,அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டெழுந்து விட்டோம் என கருத முடியாது.வெளிநாட்டு கடன்களை மீள செலுத்தாத காரணத்தால் இந்த சேவை கட்டமைப்பில் தற்காலிக நிவாரணம் கிடைக்கப் பெற்றுள்ளது.நிலுவையில் உள்ள கடன்களினால் பாரிய நெருக்கடிகள் எதிர்காலத்தில் தோற்றம் பெறும் என்பதை ஆட்சியாளர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தூரநோக்கமற்ற வகையில் இரத்து செய்யதார்.இதனால் இலங்கை சிறந்த வாய்பபை இழந்துள்ளது. என்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டார்.இலகு புகையிரத அபிவிருத்தி செயற்திட்டத்தின் பயனை பங்களாதேஷ் பெற்றுக்கொண்டது. இலகு புகையிரத அபிவிருத்தி திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.அரச முறை கடன்கள் மீள செலுத்துவது இடைநிறுத்தப்பட்டுள்ள பின்னணியில் இலகு புகையிரத அபிவிருத்தி செயற்திட்டத்துக்கு ஜப்பான் நிதியுதவி வழங்கும் என்பதை எதிர்பார்க்க முடியாது என்றார்.