ஐரோப்பிய நாடான துருக்கியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ராணுவத்தினரின் ஒரு பிரிவினர் போலீசார் துணையுடன் அதிபர் எர்டோகன் அரசுக்கு எதிராக திடீர் புரட்சியில் ஈடுபட முயன்றனர்.
வர்த்தக தலைநகரான இஸ்தான்புல்லையும், தலைநகர் அங்காராவையும் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக போர்விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ராணுவ டாங்கிகளையும் அவர்கள் பயன்படுத்தினர். இந்த 2 நகரங்களின் பல்வேறு பகுதிகளில் குண்டு வீச்சும் நடந்தது.
எனினும் அதிபர் எர்டோகன் ஆதரவு கட்சியினரும், பொதுமக்களும் லட்சக்கணக்கில் திரண்டு தெருக்களில் இறங்கி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். இதனால் ராணுவ புரட்சி முயற்சி தோல்வியில் முடிந்தது.
அப்போது, இரு தரப்பிலும் நடந்த சண்டையில் 265 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 164 பேர் பொதுமக்கள் ஆவர். 1,400 பேர் படுகாயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்ற பொதுமக்களில் மேலும் 25 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிர் இழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 290 ஆக உயர்ந்தது.
இந்த நிலையில் ராணுவ புரட்சியில் ஈடுபட முயன்ற சதிகாரர்களை துருக்கி அரசு தீவிரமாக வேட்டையாடி வருகிறது. இதுவரை ராணுவ வீரர்கள், ராணுவ அதிகாரிகள், நீதிபதிகள், அரசு வக்கீல்கள் என 6 ஆயிரத்துக்கும் அதிகமானோரை விசாரணைக்காக போலீசார் பிடித்துச் சென்றனர்.
நேற்று முன்தினம், ராணுவ ஜெனரல் மெஹ்மத் திஸ்லி உள்பட 36 ராணுவ தளபதிகள் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர். இவர்களில் 10 பேர் உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையே ராணுவ புரட்சியில் ஈடுபட்டு தோல்வி கண்ட ராணுவ அதிகாரிகள், நீதிபதிகளில் ஏராளமானோர் இன்னும் தலைமறைவாக இருப்பதாகவும் இவர்கள் மீண்டும் கிளர்ச்சியில் ஈடுபடுவதற்கான முயற்சியில் இறங்கலாம் எனவும் எர்டோகன் அரசு கருதுகிறது. இதனால் இஸ்தான்புல் நகரில் பாதுகாப்பை உறுதி செய்ய சுமார் 2 ஆயிரம் சிறப்பு அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
4-வது நாளாக நேற்றும் ராணுவ கிளர்ச்சியின் பின்னணியில் இருப்பவர்களை தேடும் வேட்டை பணி தீவிரமாக நடந்தது. நேற்று காலை இஸ்தான்புல் நகரில் உள்ள ராணுவ பயிற்சி பள்ளியில் சிறப்பு அதிரப்படை போலீசார் நுழைந்து தீவிர சோதனை நடத்தினர்.
மத்திய துருக்கியில் உள்ள கோன்யா விமானப்படைத் தளத்திலும், இஸ்தான்புல் விமான நிலையத்திலும் இதேபோல் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது பாதுகாப்பு படையினருடன் சதியில் ஈடுபட்டவர்கள் தங்களை கைது செய்யவிடாமல் மோதலில் ஈடுபட்டனர். எனினும் போலீசார் துப்பாக்கியால் சுட்டு எச்சரித்து அவர்களை கைது செய்தனர்.
இந்த 3 இடங்களிலும் ராணுவ தளபதிகள், கடற்படை தளபதிகள் என மேலும் 67 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 2 நாட்களில் மட்டும் ராணுவம் மற்றும் கடற்படையைச் சேர்ந்த 103 தளபதிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே துருக்கியில் ராணுவ புரட்சியில் ஈடுபட முயன்றதாக நாடு முழுவதும் 8 ஆயிரம் போலீசார் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் தலைநகர் அங்காரா, இஸ்தான்புல் நகரங்களில் புரட்சியில் ஈடுபட முயன்ற ராணுவ வீரர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
துருக்கி அரசு ராணுவ புரட்சி தொடர்பாக ஆயிரக்கணக்கானவர்களை கைது செய்து வருவது குறித்து துருக்கியை ஐரோப்பிய யூனியன் அமைப்பில் இணைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் அதன் ஆணையர் ஜோகன்ஸ் ஹாப் கூறுகையில், “துருக்கி அரசு முன்கூட்டியே பட்டியல் தயாரித்து வைத்து அதன்படி ஏராளமானவர்களை கைது செய்து வருவதுபோல் தெரிகிறது. இது கவலைக்குரிய விஷயம்” என்று குறிப்பிட்டார்.