விசேட வைத்திய நிபுணர்களிற்கு பற்றாக்குறை – பல வைத்தியசாலைகள் மூடப்படும் ஆபத்து என எச்சரிக்கை

100 0

நாட்டின் பல வைத்தியசாலைகளில் விசேட வைத்திய நிபுணர்களிற்கான பற்றாக்குறை காணப்படுவதாக தெரிவித்துள்ள மருத்துவநிபுணர்கள் சங்கம் இந்த நிலைக்கு தீர்வை காணாவிட்டால் பல வைத்தியசாலைகள் மூடப்படும் ஆபத்து உருவாகியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.

அரசாங்கத்தின் புதிய ஓய்வூதியக்கொள்கை காரணமாக அரசாங்க ஊழியர்கள் அறுபது வயதில் ஓய்வுபெறவேண்டிய நிலை காணப்படுவதாலும் விசேட வைத்திய நிபுணர்கள் பெருமளவில் நாட்டிலிருந்து வெளியேறுவதாலும் நாட்டின் பல பாகங்களில் உள்ள வைத்தியசாலைகளில் வைத்தியர்களிற்கு பற்றாக்குறை காணப்டுகின்றது என மருத்துவநிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அக்கரைப்பத்து காத்தான்குடி கல்முனை கிண்ணியா ஏறாவூர் திருகோணமலை கந்தளாய் கிளிநொச்சி முல்லைத்தீவு உட்பட பல வைத்தியசாலைகளில் விசேட நிபுணர்களிற்கான பற்றாக்குறை காணப்படுவதாக விசேட மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

புதிய ஓய்வூதிய கொள்கை காரணமாக ஓய்வுபெறும் வைத்தியநிபுணர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது புதிதாக இணையும் நிபுணர்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்படும் என்பதால் பற்றாக்குறை என்பது இயல்பாகவே உருவாகும் என விசேடமருத்துவ நிபுணர்கள் சங்கத்தின் பிரதிநிதியொருவர் மோர்னிங்கிற்கு தெரிவித்துள்ளார்.

தற்போது கிராமப்புற வைத்தியசாலைகளில் மாத்திரம் காணக்கூடியதாக உள்ள இந்த பற்றாக்குறை எதிர்காலத்தில் நாட்டின் பிரதானவைத்தியசாலைகளிலும் உருவாகலாம் என குறிப்பிட்டுள்ளார்.

புதிய ஓய்வூதியக்கொள்கை அறிவிக்கப்பட்ட தருணம் முதல் இவ்வாறான நெருக்கடி உருவாகலாம் என விசேட வைத்திய நிபுணர்கள் மாத்திரமின்றிபல தரப்பினர் எச்சரிக்கை விடுத்தனர் எனினும் அரசாங்கமும் சுகாதார அமைச்சரும் வேண்டுமென்று இந்த நெருக்கடி உருவாகுவதற்கு அனுமதித்துள்ளனர் எனவும விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.