அதிர்ச்சிகளை எதிர்கொண்ட 2022 ; 7.8 வீதத்தால் பொருளாதாரம் வீழ்ச்சி

141 0

இலங்­கையின் வர­லாற்றில் 2022 ஆம் ஆண்டு என்­பது மிகக் கடி­ன­மான, சவால்­­மிக்க, பொரு­ளா­தார நெருக்­க­டியை சந்­­தித்த ஆண்­டாக அமைந்­தது. முக்­கி­ய­­மாக இலங்கை வங்­கு­ரோத்து நாடாக பிர­­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டது. பாரி­ய­தொரு பொரு­ளா­தார அதிர்ச்­சியை கடந்த வரு­டம் இலங்கை எதிர்­கொண்­டது.

வரி குறைப்­­­பினால் அரச வரு­மானம் குறை­வ­டைந்­தது, இதனால் பொரு­ளா­தார ரீதி­யான நெருக்­க­டிகள் ஏற்­பட்­டன. யூரியா உரத்தை தடை செய்­த­மை­யினால் விவ­­­சாய உற்­பத்­தியில் பாரிய வீழ்ச்சி ஏற்­பட்­டது. கடன் நெருக்­கடி, சுற்­று­லாத்­துறை வரு­மானம் குறை­வ­டைந்­தமை, அந்நிய செலா­வணி வரு­மானம் குறை­வ­டைந்­­­தமை போன்­றன பொரு­ளா­தார கட்­ட­­­­மைப்­­பில் பார­தூ­ர­மான நெருக்­க­டி­களை ஏற்­­ப­டுத்­தின.

இறு­தியில் அது அர­சியல் கட்­ட­­மைப்­பிலும் பிரச்­சி­னையை  தோற்று­­வித்­தது.  அத்­தி­யா­வ­சிய பொருட்­க­ளுக்­­காக மக்கள் வரி­சை­களில் நிற்க வேண்­டிய ஒரு யுகம் கடந்த வருடம் ஏற்­பட்­­டது. பண­வீக்கம் 80 வீதத்தை தாண்­டி­­யது. உணவு பண­வீக்கம் 90 வீதத்தை தாண்­டி­­யது. கடந்த வரு­டமே வங்­கி­களின் வட்டி வீதங்­களும் கடுமையாக அதிகரிக்கப்பட்டன. இதனால் சிறிய மற்­றும் நடுத்­தர வர்த்­த­கர்­களும் பாதிக்­கப்­பட்­டனர். எரி­பொருள் பற்­றாக்­குறை கார­ண­மாக மின்­சார உற்­பத்தி பாதிக்­கப்­பட்­டது. மின்­சார துண்­டிப்பினால் நெருக்­க­டிகள் ஏற்­பட்­டன.

அது­மட்­டு­மின்றி மின்­சார கட்­டண அதி­க­ரிப்பும் மக்­களை கடு­மை­யாக பாதித்­தது. எரி­பொருள் விலை அதி­க­ரிப்பு மற்றும் டொலர் பெறு­மதி உயர்வு கார­ண­மாக மக்­களின் வாழ்க்கைச் செலவு கடு­மை­யாக உயர்­வ­டைந்­தது.  போக்­கு­­வ­ரத்து கட்­டணம் உள்­ளிட்ட சகல சேவை­களின் கட்­ட­ணங்­களும் உயர்­­வ­டைந்­தன. உணவுப் பொருள் உள்­ளிட்ட சகல உற்­பத்தி பொருட்­களின் விலை­­களும் அதி­க­ரித்­தன. இதனால் மக்கள் 2022ஆம் ஆண்டில் கடும் துன்­­­பங்­­­களை பொரு­­ளா­தார ரீதியில் அனு­ப­­­விக்க வேண்­­டிய நிலை  ஏற்­பட்­டது.

இந்த பின்­ன­ணி­யி­லேயே 2022ஆம் ஆண்­டுக்­கான மத்­திய வங்­கியின் ஆண்­ட­றிக்கை ஜனா­தி­ப­தி­யிடம் கைய­ளிக்­கப்பட்­டுள்­ளது. அந்த அறிக்­கையின் சாரம்­சம் தற்­போது வெளி­யி­டப்­பட்­டி­ருக்­­கின்­றது.   எப்­போதும் இல்­லா­த­வாறு 2022ஆம் ஆண்டு கடு­மை­யான நெருக்­க­டி­கள் ஏற்­பட்­ட­மை­யினால் மத்­திய வங்­கியின் ஆண்­ட­றிக்கை எவ்வாறு இருக்கும் என்­பது மக்­களின் எதிர்­பார்ப்­பாக இருந்­தது.  அத­ன­டிப்­ப­டையில் அதிர்ச்­சி­க­ர­மான தக­வல்­க­ளுடன் மத்­திய வங்­கியின் ஆண்­ட­றிக்கை வெளி­யி­டப்­பட்­டி­ருக்­கின்­றது. அதா­வது மிக முக்கி­ய­­­மாக 2022ஆம் ஆண்டில் நாட்டின் பொரு­ளா­தா­ர­மா­னது 7.8 வீதத்­தினால் வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­­டுள்­ளது.

அதா­வது இலங்கைப் பொரு­ளா­தா­ர­மா­னது பொது­மக்­களின் பதற்றம் மற்றும் அர­சியல் கிளர்ச்சி இரண்­டுக்கும் வழி­வ­குத்த கடு­மை­யான பொரு­ளா­தார இன்­னல்­களைக் கொண்ட மிகக் கடி­ன­மான நிலைக்கு 2022இல் முகங்­கொ­டுத்­தது. எனினும் 2022இன் இறுதிப் பகு­தியில் இருந்து பொரு­ளா­தா­ரத்தை மீட்­டெ­டுப்­ப­தற்­காக முன்­னெ­டுக்­கப்­பட்ட வேலைத் திட்­டங்கள் தற்­போது ஓர­ளவு மூச்சு விடு­வ­தற்­கான சூழலை நாட்டில் ஏற்­படுத்தி இருக்­கின்­றன என்று மத்­திய வங்­கியின் ஆண்­ட­றிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­கி­­றது.

எனினும், இவ்­வா­றான கடு­மை­யான நெருக்­க­டிக்கு மத்­தியில் மத்­திய வங்கி முன்­னெ­டுத்த வெளிப்­ப­டை­யான கொள்கை மற்றும்  நடை­மு­றைகள் நெருக்­­கடி மேலும் மோச­ம­டை­வதை  தடுத்­­த­தாக மத்­­­திய வங்­கியின் ஆண்­ட­றிக்கை கூறு­கி­றது.

2022ஆம் ஆண்டு நடுப்­ப­கு­தியில் பாரிய அளவில் உயர்வடைந்த பண­வீக்­க­­மா­னது தற்­போது மீண்டும் குறை­வ­டைந்து வரு­கின்­றது. இதற்கு மத்­திய வங்கி முன்­னெ­டுத்த நாணய கொள்கைத் திட்­டங்­களே மிக முக்­கிய கார­ண­மாக அமைந்­த­தாக ஆண்­ட­றிக்­கையில் சுட்­டிக்­காட்­ட­ப்பட்­டுள்­ளது.

எப்­ப­டி­யி­ருப்­பினும் கடந்த ஏழரை தசாப்­தங்­க­ளாக பொரு­ளா­தா­ரத்தில் வேரூன்றி­­யி­ருந்த  இலங்கையின் இன்­றைய இடை­ய­றாத தடங்­கல்­களைத்  தீர்ப்­­ப­தற்கு இந்தச் சூழ்­நி­லையில் அர­சாங்கம், மத்­திய வங்கி மற்றும் ஏனைய அனைத்து ஆர்­வ­லர்­களும் இன்­றி­ய­மை­யாத சீர்­தி­ருத்­தங்­களை நடை­மு­றைப்­படுத்­து­­வ­தற்கு ஆத­ர­வினை வழங்­கு­வது அவ­சி­ய­மாகும் என்றும் மத்­திய வங்கி ஆண்­ட­றிக்கை ஊடாக கோரிக்கை விடுத்­­துள்­ளது.

இந்­நி­லையில் 7.8 வீதமாக பொரு­ளா­தார வீழ்ச்சி பதி­வா­கி­யுள்­ளது. பொரு­ளா­தா­ரத்தில் ஏற்­பட்ட தாக்­கங்­க­ளினால் உற்­பத்­தியில் ஏற்­பட்ட வீழ்ச்சி கார­ண­மா­கவே பொரு­ளா­தார வீழ்ச்சி பதி­வா­கி­யி­ருக்­கி­றது.

மேலும் கடந்த வருடம் ஏற்­று­மதி ஊடாக இலங்­கைக்கு 13 பில்­லியன் டொலர்கள் கிடைத்­தன. இறக்­கு­மதி செல­­வாக 18.3 பில்­லியன் டொலர்கள் பதி­­வாகி இருக்­­கின்­றன. அத்­துடன் அரச வரு­மானம் மொத்த தேசிய உற்­பத்­தியில் 8.3 வீதமாக  பதி­வா­கி­யி­ருக்­கி­றது.

மேலும் இலங்­கை­யில் 2022ஆம் ஆண்டில் தொழிற்­படை 8.5 மில்­லியன் ஆக காணப்­பட்­டது. அதில் தொழில் புரிவோர் எட்டு மில்­லி­யன்­க­ளாக பதி­வா­கினர். 2022ஆம் ஆண்டில் வேலை­யின்மை வீதம் 4.7 ஆகவும் பதி­வா­கி­ய­துடன் 2022ஆம் ஆண்டில் வெளி­நா­டு­க­ளுக்கு தொழில் புரி­வ­தற்­காக மூன்று லட்­சத்து 11 ஆயிரம் பேர் சென்­றி­­ ருக்­­கின்­றனர்.

2022ஆம் ஆண்டில் எரி­பொ­ருட்­களின் விலை 185 வீதத்தால் அதி­க­ரித்­தி­ருக்­கின்­றன. பஸ் கட்­ட­ணங்கள் 140 வீதத்தால் அதி­க­ரித்து இருக்­கின்றன. ரயில் கட்­டணம் 167 வீதத்­தினால் அதி­க­ரித்து இருக்­கின்­றது. தொடர்­பாடல் சேவை­களின் கட்­ட­ணங்கள் 36 வீத­த்­தாலும் நீர் கட்­டணம் 120 வீ­தத்­தாலும் மின்­சார கட்­டணம் 114 வீதத்­தி­னாலும் அதி­க­ரித்து இருக்­கின்­றன. எரி­வாயு விலை 68 வீதத்தால் அதி­க­ரித்­தி­ருக்­கின்­­றது. உணவு பொருட்­களை எடுத்து நோக்கும் போது பாணின் விலை 166 வீதத்­­தி­னாலும் பருப்பின் விலை 57 வீதத்­­தினாலும் சீனியின் விலை 63 வீதத்தி னாலும் கோதுமை மாவின் விலை 106 வீதத்தினாலும் முட்­டை­களின் விலை 105 வீதத்தினாலும் அதி­க­ரித்து இருக்­கின்­றன. அரி­சியின் விலை 69 வீதத்­தி­னாலும்  மரக்­­க­றி­களின் விலை 18 வீதத்­தினாலும்   கோழி இறைச்­சியின் விலை 64 வீதத்­தி­னா­லும் பழங்­களின் விலைகள் 112 வீதத்­­தி­னாலும் அதி­க­ரித்து இருக்­கின்­றன.  அந்­த­வ­கையில் கடந்த வருடம் எந்­த­ளவு தூரம் மக்கள் பொரு­ளா­தார நெருக்­க­டி­க­ளினால் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றனர் என்­ப­த­னையும் வாழ்க்கைச் செலவு எவ்­வாறு உயர்­வ­டைந்­துள்­ளது என்­ப­த­னையும்  மத்­திய வங்­கியின் ஆண்­ட­றிக்கை ஊடாக புரிந்­து­கொள்ள முடி­கின்­றது.

எனினும், கடந்த வரு­டத்தில் இவ்­வாறு உணவு பொருட்­களின், சேவை­களின், விலைகள், கட்­ட­ணங்­கள் உயிர்­வ­டைந்­தாலும் கூட மக்­களின் வரு­­மா­னத்தில் அதி­க­ளவு அதி­­க­ரிப்பு காணப்­­ப­ட­வில்லை. அரச துறை­­யில் இருக்­கின்ற­­வர்­­களின் கொள்­வ­னவு வீதம் 20.6 வீதத்­தினால் 2022ஆம் ஆண்டில் வீழ்ச்­சி­ய­டைந்­தது. அதே­போன்று தனியார் துறையில் பணி­யாற்­று­கின்­ற­வர்­களின் கொள்­வ­னவு வீதம் 22.7 வீதத்­தினால் வீழ்ச்­சி­ய­டைந்­தது. முறை சாரா துறை­களில் இருக்­கின்­ற­வர்­களின் கொள்­வ­னவு வீதம் கடந்த வருடம் 17.5 வீதத்­தினால் வீழ்ச்சி அடைந்­தது.  இத­­னூ­­டாக மக்கள் எந்­த­ள­வு தூரம் தமது தேவை­களை 2022ஆம் ஆண்டில் குறைத்து கொண்டு இருக்­கின்­றனர் என்­பது தெரி­கின்­றது.

அந்த வகையில் மிகவும் ஒரு நெருக்­க­டி­யான கால­கட்­டத்தை 2022ஆம் ஆண்டு இலங்கை கடந்து வந்­தி­ருக்­கின்­றது. தற்­போது இலங்­கையில் மறு­சீ­ர­மைப்பு திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. கடன் மறு­சீ­ர­மைப்பு  செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. 2022ஆம் ஆண்டு இலங்கை வங்­கு­ரோத்து நாடாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டது.

இந்­நி­லையில் 2022ஆம் ஆண்டு சர்­வ­தேச நாணய நிதி­யத்தை இலங்கை நாடி கடன் உதவி பெற்றுக் கொள்­வ­தற்கு நட­­வ­டிக்கை எடுத்­தது. அது தொடர்பான பேச்­சு­வார்த்­தைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு தற்­போது 2.9 பில்­லியன் டொலர் கட­னு­­த­வியை பெற்­றுக்­கொள்ள இணக்­­கப்­பாடு எட்­டப்­பட்­டுள்­­ளது. அது குறித்த  உடன்­ப­டிக்­கையும் கைச்சாத்­தி­டப்­­பட்­டி­ருக்­கின்­றது. 48 மாதங்­­களில் இந்தக் கடன் உதவி இலங்­கைக்கு வழங்­கப்­படும். முத­லா­வது தவ­ணைப்­பணம் கிடைத்­துள்­ளது.

இந்­நிலை­­யில் இதற்கு சமாந்­திரமாக  நாட்டில் கடன் மறு­சீ­ர­மைப்­பு­களும் பொரு­­­ளா­தார மறு­சீ­ர­மைப்பு திட்­டங்­களும் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. சர்வ­­ தேச மட்டத்திலும் இலங்கை கடன் மறு­சீரமைப்பை செய்து கொள்ள வேண்­டும். அதேபோன்று உள்­நாட்டி­லும் கடன் மறு­ ­சீர­மைப்பு செய்து­கொள்­­ளப்படலாம் என்று தெரிவிக்கப்­படு­கின்­றது.

மத்திய வங்கியின் ஆண்டறிக்கையின் பிரகாரம் கடந்த வருடம் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்த­போதிலும் இவ்வருடத்தின் ஆரம்­பத்தி­­­லி­­ருந்து பொருளாதாரம் மீண்டு வருவ­தற்கான ஒரு சமிக்ஞை வெளிக்காட்­டப்­பட்­டி­ருக்கின்றது. அதனடிப்படையில் இந்த மறுசீரமைப்புக்கள் மற்றும் கடன் மறு­­­சீர­மைப்­புக்கள் மிக முக்கியமாக இருக்­கின்­றன. அதற்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதே மத்திய வங்கி­யின் ஆண்டறிக்கையின் முக்கிய சாராம்சமாக இருக்கின்றது. இந்நிலையில் விரிவான ஆண்டறிக்கையில் உள்­விடயங்கள் மற்றும் ஏனைய விட­யங்­கள் எவ்­வாறு இருக்­கின்றன என்­பதை ஆராயலாம். அதே­போன்று அடுத்து­வரும் காலப்பகுதி­யில் எவ்வாறான இலக்­குகள் முன்வைக்­கப்­பட்டுள்ளன என்­பதை­­யும் அறிந்து கொள்ள முடியும்.

ரொபட் அன்டனி