நபர் ஒருவரை கடத்தி யாழில் வீடொன்றில் வைத்து சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் 11பேர் கைது!

111 0

வவுனியாவைச் சேர்ந்த நபர் ஒருவரை கடத்தி வந்து வீடொன்றில் அடைத்து வைத்து சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் 3 பெண்கள் உள்பட 11 பேர் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஹஏஎஸ் வான் ஒன்றும் மற்றும்ங3 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் யகத் விஷாந்த கீழ் இயங்கும் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரே இந்தக் கைது நடவடிக்கையை நேற்று முன்னெடுத்தனர்.

வவுனியா பூவரசம்குளம் பகுதியை சேர்ந்த 34 வயதுடைய தில்லைநாதன் சுமணன் என்பவர் வெளிநாடு அனுப்புவதாக கூறி வேலணையைச் சேர்ந்த நபர்களிடம் 10 லட்சம் ரூபா பணத்தை வாங்கியுள்ளார். எனினும் நீண்ட நாள்களாக வெளிநாடு அனுப்புவதற்கான நடவடிக்கையை அவர் எடுக்கவில்லை.

அவருக்கு பணம் கொடுத்தமைக்கு எந்தவித ஆதாரமும் இல்லாததால் ஆதரத்தை உருவாக்குவதற்காக குறித்த நபரை கடத்தி வந்துள்ளனர்.

நேற்றுக் காலை முச்சக்கரவண்டி வாடகைக்கு வேண்டும் என்று கூறி இரண்டு இளம் பெண்கள் அவரை வரவழைத்துள்ளனர். அவர்கள் அழைத்த இடத்துக்குச் சென்ற போது முச்சக்கர வண்டியை அங்கு கைவிட்டு 10 பேர் கொண்ட கும்பல் அவரை அடித்து ஹஏஎஸ் வானின் ஏற்றி யாழ்ப்பாணத்துக்கு கடத்தி வந்துள்ளது.

கொக்குவில் தாவடி எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முன்பாக உள்ள வீட்டில் அடைத்து வைத்து மிரட்டி 10 லட்சம் தர வேண்டும் என்ற கடிதம் ஒன்றை எழுதி வாங்கியுள்ளது அந்தக் கும்பல்.

நபர் ஒருவர் கடத்தி வரப்பட்டு சித்திரவதை இடம்பெறுவதாக யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் யரூரின் கட்டளைக்கு இணங்க விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

சம்பவம் இடம்பெற்ற வீட்டிருந்து அந்தக் கும்பல் வானில் மன்னார் செல்ல முற்பட்டுள்ளது. கும்பல் பயணித்த வான் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் கடமையில் நின்ற போக்குவரத்து பொலிஸின் உதவியுடன் வழிமறிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

தாங்கள் உறவினர் வீட்டுக்கு வந்ததாககவும் எவரையும் கடத்தி வரவில்லை என்றும் வானில் இருந்தவர்கள் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் வாகனத்தை

கொண்டு சென்று கொக்குவில் தாவடி பகுதியில் உள்ள வீட்டை பொலிஸ் அதிரடி படையினரின் உதவியுடன் சுற்றி வளைத்தனர்.

அந்த வீட்டில் கடத்தப்பட்டவர் அடிகாயங்களுடன் காணப்பட்டுள்ளார். பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் அவரை மீட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்த்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய 20, 29 மற்றும் 40 வயதுடைய பெண்கள் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஹஏஎஸ் வான் ஒன்றும் 3 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டன.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

சந்தேக நபர்கள் இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.