சியோல் தேசிய பல்கலைக்கழகத்தை சேர்ந்த கவின்கலை மாணவர் ஒருவர் கலைப்படைப்பாக சுவரில் டேப் கொண்டு ஒட்டப்பட்டு இருந்த வாழைப்பழத்தை சாப்பிட்ட சம்பவம் பேசிபொருளாகி இருக்கிறது. மௌரிசியோ கேடிலன் என்ற கலைஞர் காட்சிக்கு வைத்திருந்த வாழைப்பழம் அருங்காட்சியக சுவற்றில் டேப் கொண்டு ஒட்டப்பட்டு இருந்தது.
காலை உணவை சாப்பிடாததால் அதிக பசி காரணமாக பழத்தை சாப்பிட்டேன் என்று தென் கொரிய மாணவர் பேட்டியில் தெரிவித்துள்ளார். நோ ஹூன் சூ என்ற மாணவர் வாழைப்பழத்தை சுவற்றில் இருந்து எடுத்து சாப்பிட்டு, பின் அதன் தோலை பழம் இருந்த சுவற்றில் அதே டேப் கொண்டு ஒட்டுகிறார்.
இந்த சம்பவம் முழுக்க வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. நோ ஹூன் சூவின் நண்பர் எடுத்த இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் ஆகி வருகிறது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அருங்காட்சியகம் சார்பில் வாழைப்பழத்தின் தோல் நீக்கப்பட்டு வேறொரு பழம் அதே மாதிரி டேப் கொண்டு சுவற்றில் ஒட்டப்பட்டது. அருங்காட்சியகத்தில் இவ்வாறு ஒட்டப்படும் பழம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை மாற்றப்பட்டு விடும் என்று கேடிலன் தெரிவித்துள்ளார். “நவீன கலையை சேதப்படுத்துவதும் ஒருவிதமான கலை தான்,” என்று தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் நோ ஹூன் சூ தெரிவித்துள்ளார். மேலும் சம்பவம் நடந்த தினம், காலை உணவை எடுத்துக் கொள்ளாததால் ஏற்பட்ட பசி காரணமாகத் தான் இவ்வாறு செய்தேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.