குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பை வலியுறுத்தி மதுரத்வனி சங்கீத சபா சார்பில் உலக சாதனை முயற்சியாக, 500 இளம் இசைக் கலைஞர்கள் கீபோர்டு வாசிக்கும் நிகழ்ச்சி சென்னை சாந்தோம் செயின்ட் பீட்ஸ் நூற்றாண்டு கலையரங்கில் நேற்று நடந்தது. இதில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது:
குடும்ப வறுமை காரணமாக குழந்தைகள் வேலைக்கு அனுப்பப்படுகின்றனர். அவ்வாறு அனுப்பப்படுவதை தடுத்து நிறுத்த 1986-ம்ஆண்டு குழந்தை தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் முறைப்படுத்தல் சட்டம் கொண்டு வரப்பட்டது.
பிறகு,2006-ம் ஆண்டு அதில் செய்த திருத்தத்தின்படி, 5-14 வயது குழந்தைகளை வேலைக்கு அனுப்பக்கூடாது. அதன்பின்னர் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தத்தின்படி, 15-18 வயது குழந்தைகளை ஆபத்தான தொழில்களில் ஈடுபடுத்தக் கூடாது.
உலக அளவில் சுமார் 16 கோடிகுழந்தை தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களில் சுமார் 9 கோடி பேர்ஆபத்தான தொழில்களில் ஈடுபட்டுவருகின்றனர் என்ற அதிர்ச்சியான செய்தியை ஒரு சர்வதேச அமைப்புசமீபத்தில் வெளியிட்டது. இந்த 16கோடி குழந்தை தொழிலாளர்களும் ஒட்டுமொத்த உலகையே மாற்றக்கூடிய வல்லமை பெற்றவர்கள் என்பதை மறந்துவிட கூடாது.
குழந்தைகளுக்கு அவர்களது வயதுக்கு ஏற்ற கல்வி அறிவை வழங்க வேண்டியது அரசுகளின் கடமை. கல்வி கற்பது குழந்தைகளின் உரிமை. அந்த உரிமையை யாரும் பறித்துவிடக் கூடாது. கரோனா காலகட்டத்தில் இந்தியாவில் 58,289 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். தமிழகத்தில் மட்டும் 2021-22-ம் ஆண்டில் 2,887 குழந்தை தொழிலாளர்களை மீட்டோம். குழந்தை தொழிலாளர்களை மீட்பதில் நாட்டிலேயே தமிழகம் 2-வது இடத்தில் இருக்கிறது.
குழந்தைகளை வேலைக்கு அனுப்புவது மிகப்பெரிய குற்றம். குழந்தைகள் வேலை செய்வதை மாணவர்கள் பார்த்தால், அதைதங்கள் பெற்றோரிடம் சொல்லி, அவர்கள் மூலமாக தொழிலாளர் நலத் துறைக்கு தகவல் தெரிவிக்கவேண்டும். இது குழந்தை தொழிலாளர்களை மீட்க பேருதவியாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.