தமிழகத்தில் முதன்முறையாக பேட்டரி மூலம் சேமிக்கும் தொழில்நுட்பம் கொண்ட சூரியசக்தி மின்நிலையம் அமைக்க மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.
வெளிநாடுகளில், சேமிக்கும் தொழில்நுட்பத்துடன் கூடிய சூரியசக்தி மின்நிலையங்கள் உள்ளன.இதனால், உற்பத்தி செய்யப்படும்சூரியசக்தி மின்சாரத்தை சேமித்துவைத்து எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இந்தியாவில் இவ்வாறு சேமிக்கும் வசதி கிடையாது.
4 மெகாவாட் திறன்: இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார் நிறுவனம் ஒன்று, ஒரு மெகாவாட் திறனில் சூரியசக்தி மின்நிலையத்தை அமைத்துள்ளது. தற்போது, அங்கு பேட்டரியில் மின்சாரம் சேமிக்கும் தொழில்நுட்பத்தில் சூரியசக்தி மின்நிலையம் அமைக்க முடிவு செய்துள்ளது.
இதற்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ள சரக்குப் பெட்டகம் போன்று பிரம்மாண்ட வடிவில்இருக்கும் பேட்டரி 4 மெகாவாட்திறன் கொண்டது. இதுவே தமிழகத்தில் அமைக்கப்படும் முதல் சேமிக்கும் தொழில்நுட்பத்திலான மின்நிலையம் ஆகும்.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறும்போது, “சூரியசக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனங்களுக்கு அதை சேமித்து வைக்கும் வசதி இல்லாததால் அவற்றை உடனே விற்பனை செய்ய வேண்டி உள்ளது. இல்லையென்றால், மின் இழப்பு ஏற்படும்.
மின் இழப்பு தடுக்கப்படும்: இந்நிலையில், பேட்டரி மூலம் சேமிக்கும் திறன் கொண்ட சூரியசக்தி மின்நிலையம் அமைக்க மின்சார ஒழுங்குமுறை ஆணையம்அனுமதி வழங்கி இருப்பது வரவேற்கத்தக்கது. இதன்மூலம், உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைச் சேமித்து வைக்க முடிவதோடு, மின் இழப்பு ஏற்படுவதும் தடுக்க முடியும்” என்றனர்.